பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


544


மாயா சகமிலையேல் மற்றெனக்கோர் பற்றுமிலை
நீயேநான் என்றுவந்து நிற்பேன் பராபரமே.
     (பொ - ள்) மாயாகாரியமாகிய இவ்வுலகம் அடியேனைப் பிணிக்குமாறு தோன்றாவிடின் எளியேனுக்கு நின்திருவடிப்பற்றன்றி வேறு எவ்வகைப்பற்றும் உண்டாகாது. அந்நிலையில் நின் திருவருளால் நீயே நான் என நினைந்து உறுதியுடன் பணிபுரிந்து நிற்பேன்.

     (வி - ம்) திருவடிப்பற்றுடையார்க்குத் திருக்கோவில் போன்று வீடுகளெல்லாம் திருக்கோவிலாகவே தோன்றும். உடம்பு முதலிய உலகியற்பொருள்களெல்லாம் சிவன் உறையுளாகத் தோன்றும். திருவடிப்பற்றுடையார்க்கு உலகம் தோன்றுவதற்கு வாயிலில்லை. தோன்றுமேல் படித்துமுடித்தவர்க்கு அந்நூல் தோன்றுந் தோற்றம்போல் பேணத்தோன்றும்.1

(107)
வானாதி நீயெனவே வைத்தமறை என்னையும்நீ
தானாகச் சொல்லாதோ சாற்றாய் பராபரமே.
     (பொ - ள்) அகல்நிறைவாம் நாயனீருடைய பெரும்பரப்பில் அடங்குதல் பற்றி வான் முதலாகிய பூதங்களும் நீயெனவே நான்மறைகள் நவில்கின்றன. அம் முறை பற்றி அடியேனையும் நாயனீராகவே அம் மறை சொல்லாதோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(108)
வெள்ளக் கருணைமத வேழமாம் நின்னருட்கென்
கள்ளக் கருத்தே கவளம் பராபரமே.
     (பொ - ள்) வெள்ளம் போன்ற நின்திருவருள் மதயானைக்கு அடியேனுடைய கள்ளவுள்ளத்தின் வஞ்சனையே கவளமாகும்.

(109)
வண்டாய்த் துவண்டு மவுன மலரணைமேல்
கொண்டார்க்கோ இன்பங் கொடுப்பாய் பராபரமே.
     (பொ - ள்) வண்டுபோலடங்கிப் பேசாமையாகிய பெரிய மலர்ப்படுக்கையின்கண் உற்றவர்கட்கே நின்திருவடிப் பேரின்பத்தினைக் கொடுத்தருள்வை.

(110)
மாயைமுத லாம்வினைநீ மன்னுயிர்நி மன்னுயிர்தேர்ந்
தாயும்அறி வானதுநீ அன்றோ பராபரமே.
     (பொ - ள்) மாயைமுதலாகிய அறிவில்பொருள்களும் நின் திருவாணைவழி நிகழ்கின்றமையின் அவையனைத்தையும் நீயென்பர். நிலைபெற்ற ஆருயிர்களும் நின் அறிவின் துணையால் அறிந்து தொழிற்பட்டழுந்துகின்றமையின் அவற்றையும் அம்முறையான் நீயென்பர். அவ்வுயிர்கள் மெய்ம்மையுணர்ந்து நின் திருவடியின்கண் அழுந்துகின்றமையின் அச் சார்பு நிலைபற்றி நீயெனவே நவில்வர்.

(111)
 
 1. 
'வளர்மதிக்.' 6. 3 - 11.