பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


545


என்னறிவும் யானும்என தென்பதுவு மாம்இவைகள்
நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே.
     (பொ - ள்) அடியேனுடைய சிற்றறிவும், அடியேனும், அடியேன்பாலுள்ள மாயாகாரியப் பொருள்களும் அறிந்து ஒழுகுதற்கும் தொழிற்படுதற்கும் நின்திருவருளாணையின் முதன்மையே முதன்மையாகவுள்ளது. அதனால் அவையனைத்தும் நின் உடைமையன்றோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக. முதன்மை-சுதந்திரம்.

     (வி - ம்) எப்பொருட்கு யார் முதன்மையோ? அப்பொருட்கு அவரே உரிமையர். அவர் ஆணைவழியே அப்பொருள் பயன்படுத்தப்படும். அதுபோல் யார் எவரைச் சார்ந்திருக்கின்றனரோ, அவர் சாரப்பட்டார்க்கு அடியராவர். அடியர் ஆண்டான் ஆணைவழியொழுகும் கடமையர். ஆருயிர்கள் சிவபெருமானுக்கு அடிமைகள். இவ்வுண்மை யுணர்ந்தார் நன்மை யெய்துவர்.

(112)
பாரறியா தண்டப் பாப்பறியா துன்பெருமை
யாரறிவார் நானோ அறிவேன் பராபரமே.
     (பொ - ள்) திருவருள் அறிவிக்க அறிவதன்றித் தாமாகவே மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் நின் திருவடிப்பெருமையினை அறியமாட்டார்; அங்ஙனமாயின் ஏழையேனோ அறிவேன்?

(113)
அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக் கப்பாலுங்
கொண்டநின்னை யாரறிந்து கொள்வார் பராபரமே.
     (பொ - ள்) (அண்டங்கள் அளவில்லன; மண்முதல் தூமாயை முடிவாகக் கருதப்படும் முப்பத்தாறு மெய்களுக்கும் தனித்தனி அண்டங்கள் அமைந்துள்ளன. அத்தகைய) அண்டங்களை இயக்கி அவற்றிற்கு ஆதாரமாக இறைவன் நிறைந்துநின்றருளுந் தன்மையால் அவ்வவ் அண்டங்களாகியும், அவற்றை யொடுக்குந்தன்மையின் அவற்றிற்கு அப்பாலாகியும், மீட்டுந் தோற்றுவிக்கக் கருதுந்தன்மையில் அப்பாலுக்கு அப்பாலாகியும் திகழ்கின்ற நின்னைத் திருவருளாலன்றி யாரறிந்துகொள்வர்? (ஒருவரும் இலர் என்பதாம்.)

(114)
ஒப்புயர்வொன் றின்றி ஒலிபுகா மோனவட்டக்
கப்பலுக்காம் வான்பொருள்நீ கண்டாய் பராபரமே.
     (பொ - ள்) ஈடும் எடுப்புமாகிய ஒப்பும் உயர்வும் இல்லாத பேச்சற்ற மவுன வட்டமாகிய பெருங்கப்பலின்கண் ஏற்றிப் பயன் பெறக்கூடிய மேலான பொருள் நின்திருவடியேயாம்.

(115)
என்போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும்
உன்போல் வலியவரும் உண்டோ பராபரமே.
     (பொ - ள்) அடியேனைப் போல் எளியவரும் தேவரீரைப் போல் வலியவரும் எவ்வெவ்விடங்களில் ஆராய்ந்துபார்த்தாலும் உண்டோ? (இல்லையென்பதாம்).

(116)