போன்று அற்றொழிவனவாம். அற்று - செயலற்று. ஒழிவன - அடங்குவன.
(122)
எந்தெந்த நாளும் எனைப்பிரியா தென்னுயிராய்ச் | சிந்தைகுடி கொண்டஅருள் தேவே பராபரமே. |
(பொ - ள்) இம்மை, உம்மை, அம்மை ஆகிய மும்மை நிலைக்களங்களிலும் அடியேனைப் பாலுண் சேயினை விட்டு நீங்காச் சால்பு நிறை தாயினைப் போன்று, எக்காலத்திலும் நீர்நிழல் போல் நீங்காது நின்று எளியேன் உள்ளத்தின்கண் குடிகொண்டு உயிர்க்குயிராய் நின்றருளும் முழுமுதற்றெய்வமே.
(123)
அஞ்சல் அஞ்சல் என்றடிமைக் கப்போதைக் கப்போதே | நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே. |
(பொ - ள்) அடியேனுடைய உள்ளத்தின்கண் மிக்கோங்கி வீற்றிருந்து அவ்வப்போதும், அஞ்சாதே அஞ்சாதே என்று உணர்த்தியருளும் அகல்நிறைவாம் தெய்வமே; அகல் நிறைவு - வியாபகம்.
(124)
என்னையுன்றன் கைக்களித்தார் யாவரென்னை யான்கொடுத்துப் | பின்னை யுன்னாற் பெற்றநலம் பேசேன் பராபரமே. |
(பொ - ள்) அடியேனை நின்பால் ஒப்புவித்தவர் யாவர்? (ஒரு வருமிலர்.) யானே என்னை நின்திருவருளால் நின்திருவடிக்கு ஒப்புவித்துள்ளேன். ஒப்புவித்தபின் நாயனீரால் அடியேன் பெற்ற பேரின்பம் சொல்லொண்ணாத தென்க.
(125)
வாய்பேசா வூமையென வைக்கவென்றோ நீமவுனத் | தாயாக வந்தருளைத் தந்தாய் பராபரமே. |
(பொ - ள்) அடியேனை வாய்பேச வொண்ணாத ஊமை போன்று வைத்தருளுதற் பொருட்டன்றோ? தேவரீர் வாய்பேசா மவுன நிலையுடன் எழுந்தருளிவந்து தாயாக நின்னருளினைத் தந்தருளினை.
(126)
தன்னைத்தந் தென்னைத் தடுத்தாண்ட நின்கருணைக் | கென்னைக்கொண் டென்னபலன் எந்தாய் பராபரமே. |
(பொ - ள்) தந்தையே! தேவரீர் தன்னை அடியேனுக்குத் தந்தருளி எளியேனைத் தடுத்தாட்கொண்டு அடிமையாக்கியருளினை; (உன்னால் அடியேன் துய்க்கும் பேரின்புக்கோர் அளவில்லை) அங்ஙனங் கொண்டருளிய நின்பெருந்தண்ணளிக்கு அடியேனா லுண்டாய பயன் யாது?1 (ஏதும் இன்றென்க.)
(127)
மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டைஉன்னிப் | பார்க்கின்அன் பர்க்கென்ன பயங்காண் பராபரமே. |
1. | 'தந்ததுன்' 8. கோயிற்றிருப்பதிகம், 10. |