| "அகர உயிர்போல் அறிவாகி எங்கும் |
| நிகரில் இறைநிற்கும் நிறைந்து." |
| - திருவருட்பயன், 1, |
உயிரெழுத்துக்களுள் அகரம் பிற உறுப்புக்களின் முயற்சி ஏதுமின்றி வாய்திறந்த அளவானே வெளிப்படும் இயற்கை ஒலி. அவ்வுண்மை வரும் தொல்காப்பிய நூற்பாவானுணர்க :
அவற்றுள், அ ஆ ஆயிரண் டங்காந் தியலும். - தொல். எழுத்து -85.
எழுத்துக்கள் உயிரெழுத்துக்களென்றும், மெய்யெழுத்துக்களென்றும், உயிர்மெய்யெழுத்துக்களென்றும் மூவகைப்படும். அவற்றுள் உயிரெழுத்துக்கள் தனித்தும் இயங்கும். மெய்யெழுத்துக்களோடு கூடி யியங்குங்கால், அம்மெய்களை உடனாய் நின்று இயக்கித் தாமும் இயங்கும். அவையே உயிர்மெய் யெழுத்துக்களாம். உயிரெழுத்துக்கள் தனித்தியங்குங்காலும், மெய்யெழுத்துக்களோடு கூடியியங்குங்காலும் அகரவுயிர் அவ்வுயிர் எழுத்துக்களோடு விரவி உடனாய் நின்று அவற்றை இயக்கித் தானும் இயங்கும்.
மெய்யெழுத்துக்கள் தனித்தியங்கா. உயிரெழுத்துக்களோடு கூடியும் அவற்றைச் சார்ந்தும் இயங்கும். மேலும் மெய்யெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வாரா. இடையிலும் ஈற்றிலும் வரும். இவற்றை வரும் நூற்பாக்களான் உணர்க:
| "உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா" |
| - தொல். எழுத்து - 60. |
| "ஞணநம னயரல வழள வென்னு |
| மப்பதி னொன்றே புள்ளி யிறுதி." |
| - தொல். எழுத்து - 78. |
மெய்யெழுத்துக்கள் உயிரோடு கூடியும் சார்ந்தும் பயன்பட வருதற்குரிமையுடைமையின் அதற்கு முன்னிலையில் அவை எவ்வாறுநிற்கின்றன என நோக்கின் அகரவுயிருடனேயே நிற்கின்றன.அவற்றைத் தனிமெய்யாக இயக்கிக் காட்டின் அகரவுயிருடன் கூட்டி ஒலித்துக் காட்டுதல் வேண்டும். இவ்வுண்மை வருமாறு காண்க :
| "மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும்." |
| - தொல். எழுத்து - 46. |
இதுபோல் இறைவன் பிறப்படைந்த வுயிரோடும், சிறப்பெய்திய உயிரோடும், காரண மாயையோடும், காரிய மாயையாகிய உடல், உறுப்பு, உலகு, உண்பொருள்களோடும் ஒன்றாய் வேறாய் உடனாய் நின்றியக்குவன் என்பது நன்கு பெறப்படும். இவ்வுண்மை வரும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையானும் உணர்க:
"இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினார். அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானு மென்றுணர்க.