பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


553


     (பொ - ள்) திருவருள் நாட்டத்தால் உயிர்மூச்சினை உள்ளடக்கி அம் மூச்சினைக் கொண்டே (ஆறு நிலைக்களங்களுள் அடிப்படையாகிய) மூலாதாரத்திலுள்ள தீயினை (ஆறாம் நிலைக்களமாகிய) புருவநடுவாகிய ஆஞ்ஞையின் மேலுள்ள திங்கள்மண்டிலத்துச் சென்று முட்டும்படி எழுப்பினால், அவ்வுடல் ஏனையார் உடல் போன்று பிணமாய் இந்நிலத்தில் விழுமோ? (விழாதென்க.1)

     (வி - ம்) பிறந்தவுயிர்களுள் மேலும் பிறக்கு நெறியிற்செல்லும் உயிர் பிறப்புயிர் எனப்படும்; திருவருட்டுணையால் பிறவா நன்னெறியிற் செல்லுமுயிர் சிறப்புயிர் எனப்படும். பிறப்புயிர்கள் தாந்தம் உடலைவிட்டு நீங்குங்கால் நீங்கா நுண்ணுடலுடன் நீங்கும். அவ்வுயிர் நின்ற பருவுடல் பிணமாய் நிலத்தே விழும். சிறப்புயிர் திருவருளால் திருவடியிற் சேரச் செல்லுங்கால் பருவுடல் நுண்ணுடல் முதலிய மாயாகாரிய மெய்களனைத்தும் திருவருள் ஒளியால் தத்தங் காரணங்களில் ஒடுங்கிவிடும். ஒடுங்கவே, எரியும் விளக்கின் எச்சம் காணப்படாமை போன்று அகத்தவத்தோர் உடலும் காணப்படுவதின்று. அந்நெறிச் சேராத ஏனையாருடல் விறகின் எச்சமாகிய சாம்பல் போன்று பிணமாய்க் காணப்படும். பிறப்புயிர்மெய் மண்வீழ் பிணமாம் வீழாமெய், சிறப்புயிர்க்கு மாயை யொடாம் தேறென்ப.

(153)
பஞ்சசுத்தி செய்துநின்னைப் பாவித்துப் பூசைசெய்தால்
விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் சிவவழிபாடு செய்யும் சிறப்பினர் ஐவகையாம் தூய்மைகள் செய்து நின்திருவடிக்குத் தன்மை அடிமைப் படுத்தலாகிய பாவனை புரிந்து பூசைசெய்தால் அனைத்திற்கும் மேலாம் நினைத்தற்கரிய சிவமெய்யுணர்வு விளக்கமுறும். பாவனை - நினைவு.

    ஐவகைத் தூய்மை - பஞ்சசுத்தி. அவை இடம், உடல், உறுபொருள், உயிர்; (உணர்வு) மந்திரம் என்ப. இவற்றை முறையே பூதசுத்தி, உடற்சுத்தி, திரவியசுத்தி, ஆன்மசுத்தி, மந்திரசுத்தி எனவுங்கூறுப.

(154)
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே.
     (பொ - ள்) (ஈன்றார் பால் அன்புள்ளவர்களும் அன்பில்லாதவர்களும் அவர் தமக்குக் காதல் நீங்காப் பிள்ளைகள் ஆவர் எனினும்) தேவரீர் திருவடிக்கு மெய்யன்புடையவரும் தேவரீரால் அன்பு செய்யப்பட்டாரும் தேவரீருக்கு மிக்க அன்பரேயாவர். அத்தகைய சிவனடியார்கட்டுத் தொண்டு செய்யுமாறு அடியேனை நீ ஆளாக்கி விட்டுவிட்டால் (அவர்தம் இணக்கத்தால்) நின் திருவடிப் பேரின்பப் பெருநிலை எளிதாகவும் இனிதாகவும் தானே வந்து பொருந்தும்.

     (வி - ம்) நல்லாசானால் நன்கு கற்பிக்கப்பட்ட மாணவன் நல்லற நெறியால் பொருளீட்டி நல்வாழ்வு வாழ்வது மேலதற்கு ஒப்பாகும்.

(155)
 
 1. 
'நாலுகரணங்.' 12. பெருமிழலைக் குறும்பர் 10. 
 " 
'முன்னியவத்' " திருமூலர் - 28.