சினமிறக்கக் கற்றாலுஞ் சித்தியெல்லாம் பெற்றாலும் | மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே. |
(பொ - ள்) உள்ளத்திற்றோன்றும் வெகுளியின் முனைப்பாய் முகத்திற்றோன்றும் சினம் எழாதவாறு பயின்றுகொண்டாலும், அகத்தவப் பயனாம் எண்பெரும் பேறுகளை எளிதிற் கைவரப்பெற்றாலும். மனமடங்கும்படியாகப் பயின்று கொள்ளாதார்க்குப் பயனற்ற வாய்ப்பேச்சு மட்டும் இருப்பதால் பயன் யாது? (யாதுமில்லை.)
(169)
வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம் | ஏதுக்குக் கூத்தாடு தெந்தாய் பராபரமே. |
(பொ - ள்) சொற்போருக்கு வந்து எதிர்த்த முருடரைப்போல், பாழான மனம் எதிரிகளில்லாமலே, எந்தையே எதன் பொருட்டுக் கூத்தாடுகின்றது? வாது - சொற்போர்.
(170)
சூதாடு வார்போல் துவண்டு துவண்டுமனம் | வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரமே. |
(பொ - ள்) சூதாடுகின்றவர்களுக்குத் தோல்விகளுக்கு மேல் தோல்விகள் ஏற்பட்டாலுங் வளைந்து வளைந்து பின்னும் சூதாடுவது போன்று மனம் வாதாடிக் கொண்டிருப்பதால் அஃதடையும் பயன் யாது? (ஏதும் இன்றென்க.)
(171)
கொள்ளித்தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்க் | கள்ளமனந் துள்ளுவதென் கண்டோ பராபரமே. |
(பொ - ள்) (கொட்டினால் கொள்ளி போன்று எரியச்செய்யும்) கொள்ளித் தேளால் கொட்டப்பட்ட பேய்பிடித்த குரங்கு துள்ளுவது போன்று வஞ்சக மனமானது துள்ளுவதனால் அஃதடையும் பயன் யாது?
(172)
வந்ததையும் போனவையும் வைத்துவைத்துப் பார்த்திருந்தால் | சிந்தை இதமகிதம் சேரும் பராபரமே. |
(பொ - ள்) உலகியல்முறை வினைக்கீடாக வந்துபொருந்தி நுகர்ந்த பொருள்களையும், நுகரவரும் பொருள்களையும் எண்ணி எண்ணி நோக்கிக்கொண்டிருந்தால், இன்பத்துன்ப ஈடுபாடுண்டாகும். அதனால் பிறப்பு இறப்பு நேரிடும். (நினையாமலிருப்பதே நன்று.)
(173)
ஏறுமயிர்ப் பாலம்உணர் விந்தவிட யங்கள்நெருப் | பாறெனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே. |
(பொ - ள்) ஆருயிரின் உணர்வு ஏறி நடந்துசெல்லும் மயிர்ப்பாலம் போன்றது, ஐம்புல நுகர்வுகள் அம் மயிர்ப் பாலத்தின்கீழ் ஓடும் நெருப்பாறோடொக்கும். (அதனால் விழிப்பாக நடத்தல் வேண்டும்)
(174)