பேரின்பினை அணையவேண்டுமென்று அடியேன்பால் எழுந்து பெரு வேட்கையினை வளர்த்தருளினையே; நின் திருவடி வாழ்வதாக.
(202)
நீர்ப்புற் புதமாய் நினைவருட்கே நின்றழியப் | பார்ப்பதல்லால் வேறுமொன்றைப் பாரேன் பராபரமே. |
(பொ - ள்) நீரிற்றோன்றுங் குமிழியினை யொத்த நிலையில்லாத அடியேன் மனம் நின் திருவருளிற் கூடி மேலாம் அறிவு வெளியாய்க் கலக்க அடியேன் கருதுவதல்லாமல் உலகியற் பொருள்களில் ஒன்றையும் கருதுதல் செய்யேன். புற்புதம் - நீர்க்குமிழி.
(203)
நீர்க்குமிழி போலென் நினைவுவெளி யாக்கரையப் | பார்க்குமிடம் எல்லாம்என் பார்வை பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் அடியேன் மனம் நீர்க்குமிழிபோன்று அவ்வருள்வெளியாம் திருச்சிற்றம்பலத்தின்கண் ஒடுங்க எளியேன் எங்குப் பார்த்தாலும் அப் பரவெளித் தோற்றமே தோன்றுகின்றது.
(வி - ம்) கழுத்தளவு நீரில் மூழ்கி நிற்பவனுக்குக் கீழும் மேலும் சூழும் நாற்புறமும் நீர்த்தோற்றமே தோன்றுவதுபோன்று உள்ளத்தின் கண் திருவருள் கைவரப் பெற்றார்க்கு எங்கும் அத் திருவருளின் தோற்றமே தோன்றுதல் இயல்பு.
(204)
ஆடிஓய் பம்பரம்போல் ஆசையுடன் எங்கும்உனைத் | தேடிஓய் கின்றேன்என் செய்வேன் பராபரமே. |
(பொ - ள்) சுழன்று ஆடி ஓய்ந்து நின்ற பம்பரம் போன்று அடியேன் பெருவேட்கையுடன் நின் திருவடியினை எங்குந் தேடிக் காணப் பெறாமையால் ஓய்ந்து போனேன். வேறு என் செய்வேன்?
(205)
வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும் | நாதாந்த மோன நலமே பராபரமே. |
(பொ - ள்) மறைமுடிவாம் வேதாந்தமும் முறைமுடிவாம் சித்தாந்தமும் பள்ளி வகுப்புப் போன்றமைந்தனவாதலின் அவை இயைபில்லாத வேறானவையென்று நல்லோர் கூறார்; மெய்கள் முப்பத்தாறுங் கடந்து மேலான உணர்வினால் பெறும் நலத்தினைக் கண்டு களித்தோரே அந்நல்லோராவர்.
(வி - ம்) வழிநின்றொழுகுவார் அதன்மேல் நிலையாகவும் முடிந்த வகுப்பாகவுந் திகழ்கின்ற சித்தாந்த நன்னெறியில் வந்து மன்னுவர். இவ்வுண்மை வருமாறு: மன்னுவர் - பொருந்துவர்.
"வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன்நூல் | ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன | நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்1 | பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே." | - 10. 2358 |
(206)
1. | 'புறச்சமய'. சிவஞானசித்தியார், 8. 2. 1 |