ஆனந்த மானநின்னை அன்றியொன்றை உன்னாத | மோனந் தமியேற்கு முத்தி பராபரமே. |
(பொ - ள்) சிவப்பேரின்பமே திருவுருவாய்த் திகழ்கின்ற நின்னை விடுத்து வேறொன்றனைக் கனவினு நினைக்க வொண்ணாத உரையற்ற மோனமே அடியேனுக்கு மாறிலா வீடுபேறாகும்.
(207)
ஏதுக்கும் உன்னைவிட இல்லையென்றால் என்கருத்தைச். | சோதிக்க வேண்டாநான் சொன்னேன் பராபரமே.. |
(பொ - ள்) அடியேன் வாயிலாக நிகழும் எச்செயலும் நின் திருவருட்டுணையின்றி நிகழாதென்றால், எளியேன் எண்ணத்தைச் சோதித்தருள வேண்டா; ஏழையேன் இதனை நின்பால் விண்ணப்பஞ்செய்துகொள்கின்றேன்.
(208)
முத்தியிலுந் தேகமிசை மூவிதமாஞ் சித்திபெற்றார். | எத்தனைபேர் என்றுரைப்ப தெந்தாய் பராபரமே.. |
(பொ - ள்) வீடுபேற்றின்கண் அருவப்பேறு, அருஉருவப்பேறு, உருவப்பேறென மூவகைச் சித்திகளுள்ளன. அவற்றைத் திருவருளால் பெற்றுள்ள அகத்தவத்தோர் எத்துணையோரென்று அளவிட்டுக் கூறுதல் அரிதென்ப. அரிது-முடியாது. அகத்தவம்-யோகம்.
(209)
நீயன்றி நானார் நினைவார்என் நெஞ்சகமார். | தாயன்றிச் சூலுமுண்டோ சாற்றாய் பராபரமே.. |
(பொ - ள்) தேவரீர் ஆட்டுவிக்கும்வழி ஆடும் இயல்பு வாய்ந்த அடியேன் நின்னையன்றி எத்தன்மையேன்; அடியேன் எண்ணம்தான் யாது! அவ்வெண்ணத்திற்குக் கருவியாகவுள்ள மனந்தான் யாது? (நின் திருவருளின்றி ஒன்றும் தொழிற்படாமையால்) எல்லாம் நின் முதன்மையின் கண்1 அடங்கியவே. அதனால் நீயே எல்லாவுரிமையும் உடையை. தாயின் வயிற்றைவிட்டுச் சூல் வேறாக விருப்பதுண்டா? (இல்லை யென்பதாம்.)
(210)
அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ. | எங்குஏன் ஏனென்ற தென்னே பராபரமே.. |
(பொ - ள்) ("சிவோகம் பாவிக்கும் அத்தால் சிவனுமாவர்" என்னும் தனித்தமிழாகமப்படி திருவருளால்) தம்முடம்பினைச் சிவ மெய்யாகக் கண்ட சுகராகிய சிவமுனிவர் (தம் தந்தையாகிய வியாசர் தள்ளாப் பருவத்து மெள்ள ஒடித் தம்மை யழைத்தபோது, எல்லாவற்றையும் சிவனெனவே கண்டிருந்தமையால்) தந்தை யழைப்பினுக்கு விடையாக ஏன் என்று கூறினர். அச் சொல் எல்லா இடங்களிலுமிருந்து உண்டாவதாயிற்று. இஃதொரு பெருவியப்பேயாம்.
(211)
1. | 'நாமல்ல'. சிவஞானபோதம். 10. 2. 1. |