பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

566
சோற்றுத் துருத்திச் சுமைசுமப்பக் கண்பிதுங்கக்
காற்றைப் பிடித்தலைந்தேன் கண்டாய் பராபரமே.
     (பொ - ள்) சோறு முதலிய உணவுப் பொருள்களை ஓவாது அடைத்துவைக்கும் தோற்பையாகிய இவ் வுடற்சுமையினை நீண்டநாள் அழியாது சுமந்து திரிய விரும்பி உயிர் மூச்சினை அடக்கிச் செய்யப்படும் அட யோகத்தைக் கைக்கொண்டு கண் வெளியே தள்ளும்படி காற்றைப் பிடித்து அலைந்தேன். (இதனாற் கைகண்ட பயன் ஏது மில்லை)

(217)
 
உள்ளபடி யொன்றை உரைக்கின்அவர்க் குள்ளுறவாய்க்
கள்ளமின்றி அன்பாய்க் களிப்பேன் பராபரமே.
     (பொ - ள்) இறைநூற்றொடர்பாக எப்பொருளையும் நூலுணர்வு நுகர்வுணர்வுகளுக்குப் பொருந்த ஒருவர் உரைப்பாராயின், அவர் தமக்கு அகத்துறவாய்ப் பொருந்திக் கரவில்லாமல் மெய்யன்பாய் அடியேன் களிப்டைவேன். நுகர்வு-அனுபவம்.

(218)
 
அடுத்தஇயல் பாகவொன்றை யான்பகர்வ தல்லால்
தொடுத்ததொன்றை யான்வேண்டிச் சொல்லேன் பராபரமே.
     (பொ - ள்) நூன்முறை மாறாது ஒரு பொருளின் உண்மையியல்பினை அடியேன் உள்ளவாறு கூறுவதன்றி எளியேனாகக் கற்பித்து, எதுவும் சொல்லேன்.

(219)
 
உள்ளமறி யாதொருவர் ஒன்றைஉன்னிப் பேசில்ஐயோ
துள்ளியிளங் கன்றாய்த் துடிப்பேன் பராபரமே.
     (பொ - ள்) அடியேன் மனக்கருத்தினை உள்ளவாறுணராது ஒருவர் ஒன்றனைத் தம்மனம்போன்று கற்பித்துக் கூறின் ஐயோ அதனைப் பொறுக்கமுடியாமல் இளங்கன்று துள்ளித் துடிப்பது போன்று துடித்து வருந்துவேன்.

(220)
 
எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.
     (பொ - ள்) உலகத்திலுள்ள அனைவரும் அனைத்துயிர்களும் திருவருளால் சிவப்பேரின்பத்தினை அணைந்து இடையறாது இன்புற வேண்டுமென்று ஒல்லும் வகை ஓவாது உளளன்புடன் எண்ணுவதல்லாமல் வேறொன்றும் அடியேன் அறியேன்.

(221)
 
முன்னாள்மெய்ஞ் ஞான முனிவர்தவம் ஈட்டுதல்போல்
இந்நாளிற் காணஎனக் கிச்சை பராபரமே.
     (பொ - ள்) முற்காலத்தில் திருவடியுணர்வாம் சிவஞானமுணர்ந்தோர் இடையறாதியற்றிச் சிவமுனிவர் ஈட்டு நற்றவம் போன்று இந்நாளிலும் மெய்யன்பர் அங்ஙனம் நற்றவம் புரிந்து ஈட்டுவதை அடியேன் கண்டு மகிழப் பெருவேட்கையுடையேன்.

(222)