பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

567
கன்மமென்ப தெல்லாங் கரிசறவே மெய்ஞ்ஞான
தன்மநிலை சார்ந்தன்பர் தன்மை பராபரமே.
     (பொ - ள்) (திருவடியுணர்வு கைவந்தோர் திருவருளால் புரியும் செயலனைத்தும் திருவருட் செயலே அதனால்) செயல்கள் அனைத்தும் குற்றம் அற்ற அறநிலையை அடைந்தன. இதுவே, மெய்யுணர்வு நிலை சார்ந்த சிவனடியார்தம் இயல்பாகும்.

(223)
 
கண்துயிலா தென்னறிவின் கண்ணூடே காட்சிபெற
மண்டிய பேரொளிநீ வாழி பராபரமே.
     (பொ - ள்) மறத்தலெனச் சொல்லப்படும் தூங்குதல் செய்யாத அடியேன் உணர்வின்கண்ணே நின் திருவடிக்காட்சி யுண்டாகும் படி அருட் பேரொளியாய் நின்ற நின்திருவருள் வாழ்க.

(224)
 
நானான தன்மையென்று நாடாமல் நாடஇன்ப
வானாகி நின்றனைநீ வாழி பராபரமே.
     (பொ - ள்) அடியேன் நானென்னும் உரிமையும் முதன்மையும் கொள்ளும் நானான தன்மையினை, எந்நாளிலும் விரும்பாமல் நின்திருவடியே நிலைத்த புகலென நாடப் பேரின்பப் பேரறிவுப் பெருவெளியாகிய திருச்சிற்றம்பலமாகி நின்றனை, நின்திருவடி வாழ்க.

(225)
 
அகத்தூ டணுவணுவாய் அண்டமெல்லாந் தானாய்
மகத்தாகி நின்றனைநீ வாழி பராபரமே.
     (பொ - ள்) பேரொடுக்கக் காலத்தில் நுண்மையணுவினுள் மீநுண்மையாகியும், காப்புக்காலத்தில் அண்டங்களனைத்தும் தானேயாகியும், படைப்புக் காலத்தில் இவ்வனைத்தையுங் கடந்த மிகப்பெரிய மேலான நிலையில் நிற்பதாகியும் உள்ள நின்திருவருள்நிலை என்றும் வாழ்க.

(226)
 
காரகமாங் கர்ப்பஅறைக் கண்ணூடும் என்கண்ணே
வாரம்வைத்துக் காத்தனைநீ வாழி பராபரமே.
     (பொ - ள்) திணிந்த இருள் நிறைந்த கருவறைக் கண்ணும் அடியேன்பால் தண்ணளியாகிய பேரன்பு வைத்துக் காத்தருளினை. அத்தகைய நின்திருவருள் வாழ்க.

(227)
 
புரந்தோர்தந் தேசமென்பார் பூமிமையப்போ ராடி
இறந்தோருந் தம்மதென்பார் என்னே பராபரமே.
     (பொ - ள்) நிலத்தை ஆண்டவர்கள் அதனைத் தம் நாடென்று கூறினர். அந்நிலத்தின் பொருட்டுப் பெரும்போர் செய்து இறந்த வரும் தம்முடைய நிலமென்று கூறினர். இஃதென்ன வியப்பு? (இருவரில் எவரும் நிலையாக விருந்து வாழ்ந்தாரல்லர்.)

(228)