பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

57

பன்னிருசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப
    அன்பினா லுருகிவிழிநீர்
  ஆறாக வாராத முத்தியின தாவேச
    ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி
    தழுதழுத் திடவணங்குஞ்
  சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்க னேனையுத்
    தண்ணருள் கொடுத்தாள்வையோ
துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
    தொழுதருகில் வீற்றிருப்பச்
  சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே
    சொரூபாங பூதிகாட்டிச்
செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர்
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.
     (பொ - ள்.) "அங்கைகொடு . . . வணங்கும்" - (மெய்யன்பர்கள்) அழகிய கைகளினால் நறு மலர்களினைக் கொண்டு (செந்தமிழ்த் திருமாமறை முறைகளிற் காணப்படும் போற்றி யெனும் மந்திரமுடிபினையுடைய தொடர்புகளைப் புகன்று) திருவடிக்கண் தூவி, மெய் மயிர்பொடிப்பக் காதலால் உள்ளம் உருகி, இன்பக்கண்ணீர் விழியிரண்டினின்று அருவியென வழிய, தெவிட்டாத வீடுபேற்றினது வெறிவேட்கை யென்னும் பெருங்கடற்குள் மூழ்கி இறவா இன்பம் அளிக்கும் அறவோனே! தான்றோன்றிய தண்ணருளே! பேரின்பத் தோற்றத்துப் பெருகிய நிலைக்களமே! (என வாயார வாழ்த்தி) என்று நாத்தமும் பேற (வனப்புற) வணக்கஞ் செய்யும்;

     "சன்மார்க்க . . . வீற்றிருப்ப" - நன்னெறி நான்மைவழி நில்லாத, புன்னெறிச் செல்லும் புலையனேனையும் (நின்னுடைய அந்தண்மையாகிய தண்ணளிபுரிந்து ஆட்கொண்டருள்வையோ? மிகவும் உயர்ந்த செல்விவாய்ந்த சனகன் முதலாய முனிவேந்தர்கள் உச்சிமேற் கைகுவித்து முறையுறத் தொழுது (திருவடியின் அண்மையில் வேறோர் எண்ண மின்றி நின் திருமுகச் செவ்வி நோக்கி) வீற்றிருப்ப;