பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

572
கன்னல்தரும் பாகாய்க் கருப்புவட்டாய்க் கற்கண்டாய்
இன்னமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே.
     (பொ - ள்) தேவரீர் அடியேன் மனத்தகத்து இனிய கரும்பினின்று காய்ச்சி எடுக்கப்படும் வெல்லப் பாகும், வெல்லக் கட்டியும், கற்கண்டும், இனிய அமுதமும் போன்று மாறா இன்பந்தந்து கொண்டிருக்கின்றீர்.

(248)
 
சிற்பரமே தற்பரமே தெய்வச் சுருதிசொன்ன
அற்புதமே அன்பே அறிவே பராபரமே.
     (பொ - ள்) மேலான வாலறிவனே, தன்னொப்பாரில்லா மேலோனே, தெய்வத் தமிழ்மறையாகத் திகழ்வோனே, அம் மறைக்கண் எடுத்தோதப்படும் வியத்தகு மறைப்பெருமானே, அன்புருவானவனே, இயற்கை யுணர்வினனே.

(249)
 
அறிவிப்பான நீயென்றால் ஐம்புலன்க டந்தந்
நெறிநிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே.
     (பொ - ள்) (தேவரீர்) அவரவர் வினைக்கீடாக அவரவர் மனத்தகத்திருந்து அறிவித்தருள்கின்றவன் நீயே ஆவாய். அங்ஙனமாயின் தாமாக ஐம்பொறிகளையும் அடக்கி நன்னெறிப்படர்ந்து அம் மேலான உணர்வு நெறியில் நிற்கும் மேலோர் யாவரோ? நிகழ்த்தியருள்வாயாக. (பள்ளி மாணவன் நல்லாசான் துணைகொண்டு வல்லவாறு முயன்று கற்பதற்கேற்றவாறு அவ்வாசானால் அவன் மேல்வகுப்பின்கண் வைக்கப்படுவன்.) அதுபோல் நன்னெறி நாற்படியிலொழுகுவாரை நாயனே மேல் நிலையில் நிறுத்துவன்.

(250)
 
அந்தக் கரணமெனும் ஆகாத பேய்கள்எனை
வந்துபிடித் தாட்ட வழக்கோ பராபரமே.
     (பொ - ள்) மனத்தின் ஒரு நிலையாகிய தூக்கியெண்ணும் சித்தமும், நினைந்து ஐயுறும் மனமும், முனைந்துகாண முற்பட எழும் ஆங்காரமும், கொள்ளவும் தள்ளவும் வினைக்கீடாக ஆய்ந்து உறுதி செய்யும் புத்தியும் என்று சொல்லப்படும் அந்தக்கரணங்கள் நான்கும், அடியேனுக் கொவ்வாத பேய்களாய் வந்து எளியேனைப் பிடித்து ஆட்டல் முறையோ?

(251)
 
ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த
தெய்வ அறிவே சிவமே பராபரமே.
     (பொ - ள்) அடியேன் ஐம்பொறிகளின் வழிச் செல்லாமல், நின்திருவருள் வழிச் செல்லுமாறு, தனிப்பெருங் காட்சியினை அடியேனுக்குக் குருவாக எழுந்தருளி வந்து தந்தருளிய தெய்வ அறிவே, "சிவனெனு நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மா"னாகிய செம்பொருளே.

(252)