(வி - ம்.) அண்ட பிண்டங்களின் தோற்றங் காணாமை அவையின்மையானன்று; அவற்றான் வரும் பயனேதும் நோக்கி நாடாமையான் என்க. "மரத்தை மறைத்தது" என்னும் திருமந்திரத்திருப் பாட்டுக்கும் இதுவே பொருளென்ப.
(279)
எத்தனையோ கோடி யெடுத்தெடுத்துச் சொன்னாலுஞ்
சித்தம் இரங்கிலைஎன் செய்வேன் பராபரமே.
(பொ - ள்) அடியேன் படும்பாட்டைத் தேவரீர்முன் எத்தனையோ கோடிக்கணக்காக எடுத்து எடுத்து விண்ணப்பித்தாலும் நும்திருவுள்ளம் எளியேன்பால் இரக்கங் கொள்ளவில்லை. இனி அடியேன் என் செய்யக் கடவேன்?