அங்ஙன நின்றும் திருவருள் புரிவதால் அம் மொழி ஏற்றுரையன்று இயல்புரையேயாம். ஏற்றுரை - உபசாரம். இயல்புரை - உண்மை.
(282)
கட்டுங் கனமும்அந்தக் காலர்வரும் போதெதிர்த்து | வெட்டுந் தளமோ விளம்பாய் பராபரமே. |
(பொ - ள்) உறவு முதலிய மக்கட் கூட்டமும், ஆட்சி முதலியவற்றால் ஏற்படும் பெருமையும், நமன்தூதர் நண்ணும்போது அவர்களை வெட்டி வீழ்த்தும் படையாகுமோ? (ஆகாதென்க.) ஆயின் திருவருட்டுணையால் நமன் தூதர் சிவனடியாரை நண்ண அஞ்சுவர். இவ்வுண்மை வருமாறு :
| "கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலின் |
| ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" |
| - திருக்குறள், 269. |
(283)
பேசாத மோனநிலை பெற்றன்றோ நின்னருளாம் | வாசாம கோசரந்தான் வாய்க்கும் பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் வாயடங்குதலாகிய மவுனநிலை கை கூடினால் அல்லவா, மாற்றம் மனங்கழிய நிற்கும் நின்திருவடிநிலை கைகூடும்?
(284)
கற்றாலுங் கேட்டாலுங் காயமழி யாதசித்தி | பெற்றாலும் இன்பம்உண்டோ பேசாய் பராபரமே. |
(பொ - ள்) உலகியல் நூலனைத்தும் நுணுகிக் கற்றாலும், கற்றவர் சொல்லக் காதலித்துக் கேட்டாலும், மூச்சுப்பயிற்சியால் உடம்பினை அழியவிடாமல் நெடுநாள் பேணி வைத்திருந்தாலும், இவற்றால் நின் திருவடிக்கண் திருவருளால் இரண்டறக்கலக்கும் மெய்ப் புணர்ப்பு நிலை கைவருமோ? (கைவராதென்க.)
(285)
கண்டவடி வெல்லாங் கரைக்கின்ற அஞ்சனம்போல் | அண்டமெல்லாம் நின்னருளே அன்றோ பராபரமே. |
(பொ - ள்) கருநிறம் பொருந்திய அஞ்சனமை தன்னால் தீண்டப்பட்ட பொருள்களனைத்தையும் தன்நிறமாக்கும் தன்மை போன்று, திருவருளால் கலக்கப்பட்ட அண்டங்களெல்லாம் நின்திருவருள் வண்ணமாமன்றோ?
(286)
தன்செயலால் ஒன்றுமிலை தானென்றால் நான்பாவி | நின்செயலால் நில்லா நினைவேன் பராபரமே. |
(பொ - ள்) (ஆருயிர்களால் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் திருவருளின் தூண்டுதலாலும் துணையினாலும் செய்யப்படுவன. அதனால்) எளியேன் செயலால் ஆவது யாதொன்றுமில்லையெனத் தெளியக் கண்டும், கொடியேனாகிய யான் நின்செயலாக நில்லாமல் வேறு நினைவு கொள்வது எதன் பொருட்டு?
(287)