பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

612
பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்
என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ.
     (பொ - ள்) பொன்னம்பலத்தின்கண் நாகணவாய்ப் புள்ளினையொத்த திருவாயினையுடைய சிவகாமி அம்மையாரின் அழகிய அருள் விழிகளென்னும் வண்டுகள் திருவடி இன்பத் தேனையுண்ணும் பொருட்டு இடைவிடாது சுற்றிக் கொண்டிருந்தும், அடியேனுடைய அரிய அமிழ்தம் போன்ற கூத்தப் பெருமான்றன் திருவடி நலத்தின் கண் பேரன்பு வைப்பது எந்நாளிலோ?

(2)
 
நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்
தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடுநாள் எந்நாளோ.
     (பொ - ள்) அடியேனை, மாயை மயக்கினின்றும் விலக்கி ஆணவப் பெரும்பிணிப்பினை யறுத்துத் தன் திருமுன் திருச்சிற்றம்பலத்தின்கண் "எடுத்தபொற்பாத"த்தால் எளியேனை ஆண்டுகொண்டு அப்பாதத்தின்கண் தூக்கி வைத்தருளும் திருவடியினைத் தொழுதிடு நாள் எந்நாளோ?

(3)
 
கருமுகங்காட் டாமல் என்றுங் கர்ப்பூரம் வீசுந்
திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ.
     (பொ - ள்) பிறவிக்கு இடம் காட்டாமல் எந்நாளிலும் கருப்பூர மணங்கமழ்ந்து கொண்டிருக்கும் கூத்தப் பெருமான்றன் திருமுகத்தை நோக்கி மலக்கோணலாகிய திருக்கினை1 அறுப்பதெந் நாளோ?

(4)
 
வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரை
அஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ.
     (பொ - ள்) விருப்பத்தை மிகுவிக்கின்ற சேற்கெண்டையென்னும் விழியினையுடைய மையல் மாதர்மேல் வைக்கும் ஆசையாகிய நஞ்சுக்கு அஞ்சி அடைக்கலம் புகும் சிவனடியார்களை அஞ்சவேண்டாவென்று கைகாட்டி யருளும் அஞ்சற் கைக்கு அடியேன் அடைக்கலம் புகுவதெந்நாளோ?

(5)
 
ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்
வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ.
     (பொ - ள்) ஆறு வகையாகச் சொல்லப்படும் சமயங்களினும் தத்தம் வினைக்கேற்றவாறு பிறந்தும் சார்ந்தும் வழிபட்டுவரும் அவரவர் கைக்கொண்ட தெய்வங்களாய் நின்று விளங்கியருளுகின்ற மிக மேலான அறிவாற்றலாம் திருவருளின் திருவடிகளை அடியேன் அடைந்துய்வது எந்நாளோ?

(6)
 
 1. 
'பெருகலாந்தவம்', 5. 88 - 1.
 " 
'ஒரு கோட்டன்'. சிவஞான சித்தியார், காப்பு.