பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

619
    (வி - ம்.) திருமூல நாயனார் அறுபான்மும்மை நாயன்மாருள் ஒருவர். திருவருளால் தனித்தமிழாகமந் தந்தருளிய அகத்தவப் பேற்றினர். அது திருமந்திரம் எனப்படும். அதிலுள்ள ஒரு திருப்பாட்டு வருமாறு :

"மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
 ஞாலம் அறியவே நந்தி அருளது
 காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
 ஞாலத் தலைவனை நண்ணுல ரன்றே."
- 10. சிறப்புப்பாயிரம்
(7)
கந்தரநு பூதிபெற்றுக் கந்தரநு பூதிசொன்ன
எந்தைஅருள் நாடி இருக்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) திருமுருகப் பெருமானின் திருவருளுணர்வு நற்றவத்தால் கைவரப்பெற்று, அப் பெருமானின் திருவடிப் பேற்றினை உலகுணர்ந்துய்யக் "கந்தரனுபூதி" என்னும் தனித்தமிழ, மாமறையினைத் திருவாய் மலர்ந்தருளிய எம் ஆருயிர்த் தந்தையாகிய அருணகிரிநாதருடைய திருவருளினை நயஞ்சார் பேரன்புடன் நாடியிருக்கும் நாள் எந்நாளோ?

(8)
எண்ணரிய சித்தர் இமையோர் முதலான
பண்ணவர்கள் பத்தரருள் பாலிப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) அளவிடற்கரிய அகத்தவப் பேறுடைய அளவில்லாத சித்தர்களும், சிவனடி மறவாத இமையோர் முதலாகிய சிவவுலகத் தேவர்களும், காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதும் நாவும், ஓவாதுள்கும் நெஞ்சமும், சேவேந்து வெல் கொடியான் திருவடிக்குப் பிழையாது தொண்டுபேணும் யாக்கையும் திருவருளால் அமையப்பெற்று மெய்த்தொண்டு வாய்த்துள்ள பத்தர்களும் அடியேன்பால் அருள்புரிவ தெந்நாளோ?

(9)
 
சுக்கிலமும் நீருஞ் சொரிமலமும் நாறும்உடல்
புக்குழலும் வாஞ்சையினிப் போதும்என்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) வெண்ணீராகிய சுக்கிலமும் செந்நீராகிய இரத்தமும் பெருகி வழிந்தோடும் மலமும் முதலாயுள்ளவற்றால் முடைநாற்றமெடுக்கின்ற இவ்வுடலினுக்குள்ளே புகுந்து உழன்றுவரும் ஆசை அடியேனுக்கு இனிப் போதுமானது என்ற உறுதி எண்ணம் தோன்றுவ தெந்நாளோ? (இனியுன் திருவடியை அடைவதெந்நாளோ?)

(1)
நீர்க்குமிழி பூணமைத்து நின்றாலும் நில்லாமெய்
பார்க்குமிடத் திதன்மேற் பற்றறுவ தெந்நாளோ.