காரியம் போலும் விளைகின்ற மயக்கத்தினை விட்டு நீங்குவது எந்நாளோ? தோன்றி மறையுந் தன்மைக்கு இந்திரசால மொப்பாகும்.
(7)
ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இவ்வுடலில் | வாழ்ந்துபெறும் பேற்றை மதிக்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) கூர்ந்து நாடினால் இவ்வுடல் அருவருக்கத் தகுந்த தன்மையுடையதாகும். இவ்வுடலில் தங்கியிருந்து பெறுதற்குரிய திருவடிப்பேறாம் பெரும் பேற்றினை அணைய அருளால் நினைக்குநாள் எந்நாளோ?
(8)
மும்மலச்சே றான முழுக்கும்பி பாகமெனும் | இம்மலகா யத்துள் இகழ்ச்சிவைப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) ஆணவங் கன்மம் மாயை என்னும் மும்மலமாகிய சேற்றினால் விளைந்த முழுக்கும்பி பாகமென்னும் நரகத்தினை யொத்த இம் மாயாகாரிய உடலகத்து வெறுப்பினை அடைவது எந்நாளோ?
(9)
நாற்றமிகக் காட்டு நவவாயில் பெற்றபசுஞ் | சோற்றுத் துருத்தி சுமைஎன்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) தீநாற்றம் மிகக்காட்டும் ஒன்பது தொளைகளையுடைய பசிய சோற்றுக்குவியலைத் திணிக்கும் தோற்பையினைப் பொறுக்காலற்றாச் சுமை யென்ப தெந்நாளோ?
(10)
உருவிருப்ப வுள்ளேதான் ஊறும் மலக்கேணி | அருவருப்பு வாழ்க்கையைக்கண் டஞ்சுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) புறத்தே தோற்றத்தில் அழகாக இருக்கவும், அகத்தே மலமானது கேணிநீர்போல் ஊற்றெடுத்துப் பெருகி வழிதலால் இவ்வுடம்பொடு கூடிய வாழ்க்கை அருவருக்கத் தக்கதென்று உய்த்துணர்ந்து கண்டு அஞ்சுநாளெந்நாளோ?
(11)
மெய்வீசு நாற்றமெலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப் | பொய்வீசும் வாயார் புலையொழிவ தெந்நாளோ. |
(பொ - ள்.) மெய்யின்கண் உண்டாகின்ற தீநாற்றமனைத்தையும், மிகுந்த மஞ்சளைப்பூசி மறைத்து, நம்பும்படியாகப் பொய்களைப் பேசித் திரியும் வாயினை யுடையராகிய மையல் மாதர்தம் பொல்லாங் கினை நீங்குவது எந்நாளோ?
(1)
திண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டில் | கண்ணிவைப்போர் மாயங் கடக்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) திடமான மனமென்னும் பறவை எளிதாக வந்து அகப்பட்டுக்கொள்ளும்படி, கூந்தலாகிய காட்டில் நறுமண மாலையாகிய