பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

625
வாக்காதி யானகன்ம மாயைதம்பால் வீண்காலம்
போக்காமல் உண்மை பொருந்துநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) வாய், கால், கை, எருவாய், கருவாய் என்று சொல்லப்படும் தொழிற் கருவிகளால் விளைந்த மாயா காரியங்களில் வீணாகக் காலத்தைக் கழியாது, மெய்ப்பொருளாந் திருவருளைச் சாரு நாள் எந்நாளோ? வாய் - வாக்கு, கால் - பாதம், கை - பாணி, எருவாய் - பாயுரு, கருவாய் - உபத்தம்.

(4)
மனமான வானரக்கைம் மாலையாக் காமல்
எனையாள் அடிகளடி எய்துநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மனமாகிய குரங்கின் கையில் எளியேன் பூமாலை போன்று அல்லலுறாமல் அடியேனை ஆட்கொண்டருளும் சிவபெருமான் திருவடிக்கு அடிமையாகும் நாள் எந்நாளோ.

(5)
வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணமனக்
காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) உலகியற் பொருள்களில் வேட்டையாடுகின்ற ஐம்புலப் 1 புலையர்கள் எளியேனை வந்து அடையாவகை, மனமெனுங் காட்டைத் திருத்தித் திருவடிப் பேறாகிய எல்லையினைத் திருவருளால் காண்பது எந்நாளோ?

(6)
உந்து பிறப்பிறப்பை உற்றுவிடா தெந்தையருள்
வந்து பிறக்க மனமிறப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) இருவினைகளுக்கு ஈடாகப் பிறப்பினிலும் இறப்பினிலும் மீண்டும் மீண்டும் தள்ளிவிடுவது மனமே; அத்தகைய மனத்தின்வழிச்சென்று பிறப்பையும் இறப்பையும் அடையாது எந்தையாகிய சிவபெருமான் திருவருளினை அடியேன் அடையும்படி எளியேன் மனம் இறந்துபடுவ தெந்நாளோ? இறந்துபடுதல் - அடங்குதல் அஃதாவது மனம் தீயவழியிற் செல்லாது, நல்ல வழியிற் 2 செல்லுவது.

(7)
புத்திஎனுந் துத்திப் பொறியாவின் வாய்த்தேரை
ஒத்துவிடா தெந்தையருள் ஓங்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) புத்தியென்று சொல்லப்படும் படப் பொறிகளை (புள்ளி)யுடைய பாம்பினது வாயிலகப்பட்ட தேரையை ஒத்துவிடாது எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவருள் அடியேன்பால் ஓங்கி விளங்குவது எந்நாளோ? துத்தி - பாம்பின் படப்பொறி.

(8)
ஆங்கார மென்னுமத யானைவா யிற்கரும்பாய்
ஏங்காமல் எந்தையருள் எய்துநாள் எந்நாளோ.
 1. 
'ஐம்புலவேடரின்'. சிவஞான போதம். நூற்பா - 8.  
 2.  
'சென்ற இடத்தாற்'. திருக்குறள், 422.