பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

628
அறிவின்கண் நேர்ந்த அறியாமையாகிய இருட்கடல் வற்றியொழியுநாள் எந்நாளோ?

(16)
புன்மலத்தைச் சேர்ந்துமல போதம் பொருந்துதல்போய்
நின்மலத்தைச் சேர்ந்துமல நீங்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தாழ்வான உலகியல் மயக்கங்களை யடைந்து ஆணவமுனைப்பாம் தற்போதம் எனப்படும் சிற்றறிவு பொருந்துதலினின்றும் நீங்கி, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய சிவபெருமானின் திருவருளைச் சார்ந்து அடியேன் மலம் நீங்கப் பெறுநாள் எந்நாளோ?

(17)
கண்டுகண்டுந் தேறாக் கலக்கமெல்லாந் தீர்வண்ணம்
பண்டைவினை வேரைப் பறிக்குநாள் எந்நாளோ
    (பொ - ள்.) நூல்வாயிலாகவும் கண்கூடாகவும் பார்த்தும் பார்த்தும் மனத்தெளிவு அடையாமல் உண்டாகும் கலக்கமெலாம் நீங்கும்வகை பழவினைகளின் வேரைத் திருவருளால் பறித்து நீங்கு நாள் எந்நாளோ?

(18)
பைங்கூழ் வினைதான் படுசாவி யாகஎமக்
கெங்கோன் கிரணவெயில் எய்துநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) பழவினையாகிய பயிர் உள்ளீடில்லாத மிகுந்த சாவியாகும்படி எம் முதல்வனாகிய சிவபெருமானின் திருவருளொளிக் கதிர் அடையுநாள் எந்நாளோ?

(19)
குறித்தவித மாதியாற் கூடும்வினை எல்லாம்
வறுத்தவித்தாம் வண்ணம்அருள் வந்திடுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) நினைவு, சொல், செயல் வாயிலாக வந்து கூடும் அளவிலாத வினையனைத்தும் திருவருளால் வறுத்தவித்துப் 1 போல் நின்று பயனற்றுக் கழியுமாறு திருவருள் வந்து பொருந்து நாள் எந்நாளோ?

(20)
சஞ்சிதமே யாதி சரக்கான முச்சேறும்
வெந்தபொரி யாகஅருள் மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) சஞ்சிதமாகிய எஞ்சுவினையும், பிராரத்தமாகிய ஏன்ற வினையும், ஆகாமியமாகிய ஏறுவினையும் ஆகிய சரக்குகள் என்னும் மூவகைச் சரக்குச்சேறும் வெந்த நெற்பொரிபோன்று ஆகும் வண்ணம் திருவருளைப் பொருந்துநாள் எந்நாளோ?

(21)
தேகமுதல் நான்காத் திரண்டொன்றாய் நின்றிலகும்
மோகமிகு மாயை முடியுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) உடல், உறுப்பு, உலகம், உண்பொருள் ஆகிய நால்வகைத் தோற்றத்தோடு கூடித் திரண்டு ஆருயிரினோடு ஒன்றுபட்டு

 1. 
'எல்லையில் பிறவி'. சிவப்பிரகாசம், 89.