பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

630
    (பொ - ள்.) ஆருயிர்கள் தத்துவங்களுடன் கூடிக் காரியப் பட்டுப் பின்னிக் கிடக்கின்ற சகலாவத்தை யென்னும் உலகியற் பொருட் குவியலாகிய அழுக்குக் குப்பையிடை அவற்றை நீங்குதற் பொருட்டுச் சிவபெருமானின் திருவடியுணர்வாம் வெந்தழலைத் திருவருளால் மூளச் செய்வதெந்நாளோ?

(26)
மாயா விகார மலமொழிசுத் தாவத்தை
தோயா அருளைத் தொடருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மாயையினால் காரியப்பட்டு விரிந்து கிடக்கும் உலகுடல் முதலியவற்றானுண்டாம் கன்ம மலம் நீக்குவதற்கேதுவாகிய கேவல சகலங்கள் இரண்டுந் தாக்காமல் மிக மேலான பேரின்பப் பெருவாழ்வைப் பெற்றிருப்பதான தூயநிலை எனப்படும் சுத்தாவத்தையினை யடைந்து திருவருளினைப் பின்பற்றிச் செல்லுநாள் எந்நாளோ?

(27)
உடம்பறியும் என்னும்அந்த ஊழலெல்லாந் தீரத்
திடம்பெறவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) (ஆருயிர் உடல் முதலியவற்றிற்கு வேறாகவுள்ளன என்னும் உண்மையினைப் பொருந்துமாறு பற்றி உணர்த்துவது தன் உண்மை) காணப்படும் இவ்வுடம்பே எல்லாவற்றையும் அறியும்; இவ்வுடம்பிற்கு வேறாக ஆன்மா என்பது ஒன்றில்லை என்று சொல்லித் திரியும் குளறுபாடெல்லாம் நீங்கி உடம்பிற்கு வேறாக உயிர் உண்டென்பது உறுதியாகத் திருவருளால் (எம்மைக்) காண்பது எந்நாளோ?

    (வி - ம்.) ஆருயிர்கள் எம்மைக் காண்பதென்பதனை ஆன்ம தெரிசனமென்ப. அஃதாவது சிவகுரு எழுந்தருளியதும் அவர் தமக்கு ஆசானென்றும், தாம் அவர்க்கு அடிமை என்றும் எண்ணுவதே ஆருயிர்க்காட்சியெனப்படும் ஆன்ம தெரிசனம். உடம்பு முதலியவற்றிற்கு வேறாக ஆருயிர் உண்டென்றுணர்தல் ஆன்ம ரூபம் எனப்படும்.

(1)
செம்மையறி வாலறிந்து தேகாதிக் குள்ளிசைந்த
எம்மைப் புலப்படவே யாமறிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) திருவருளால் தனித்தமிழ் மெய்கண்ட நூல்களை உணர்வதால் செம்மையறிவுண்டாம். அவ்வறிவால் உடம்பு முதலிய தத்துவங்களுக்குட் பொருந்திய எம் உண்மையினைப் புலப்பட வுணர்ந்து கொள்ளுநாள் எந்நாளோ?

(2)
தத்துவமாம் பாழ்த்த சடவுருவைத் தான்சுமந்த
சித்துருவாம் எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) தூமாயை, தூவாமாயை, பகுதிமாயை எனப்படும் வகையாம் தத்துவங்களாலாகிய அறிவிலா உடம்பைச் சுமந்து திரிகின்ற அறிவுள்ள எம்மைத் திருவருளால் காண்பது எந்நாளோ? தேகான்மவாதம்.)

(3)