பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

639
ஊழ்வினை நீங்குமாறு அளவற்ற எல்லையில்லாத பெருங்கடல் போன்றுள்ள வற்றாத முற்றின்பப் பெருவெள்ளம் வந்து எளியேமை மூடும் நாள் எந்நாளோ?

(3)
எல்லையில்பே ரின்பமயம் எப்படிஎன் றோர்தமக்குச்
சொல்லறியா ஊமர்கள்போற் சொல்லுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) எல்லையில்லாத திருவடிப் பேரின்பப் பெரு வெள்ளம் எத்தகையதென்று வினவுவோர்க்குப் பேச்சடங்கி மவுனநிலை உற்றோர் போன்று சொல்லாமற் சொல்லுதலாகிய அறிவுக்கை அடையாளமாகிய குறிப்பானுணர்த்து நாள் எந்நாளோ?

(4)
அண்டரண்ட கோடி அனைத்தும் உகாந்தவெள்ளங்
கொண்டதெனப் பேரின்பங் கூடுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தேவர்கள் வாழும் பலகோடி அண்டங்களும் பேரொடுக்கக் காலத்துத் தோன்றும் ஊழி வெள்ளத்துள் ஒருங்கு மூழ்குவது போன்று திருவடிப் பேரின்பப் பெருங்கடல் வந்து எளியேமைப் பொருந்துநாள் எந்நாளோ?

(5)
ஆதியந்த மில்லாத ஆதிஅ நாதிஎனுஞ்
சோதிஇன்பத் தூடே துளையுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) பிறப்பும் இறப்பும் இல்லாத, ஆதியாகிய காரணம் என்னும் தன்மையோடு அழியாத் தொன்மையதாய் உள்ள திருவடிப் பேரொளிப் பேரின்ப வெள்ளத்துள்ளே மூழ்குநாள் எந்நாளோ? துளைதல் - கலத்தல்; மூழ்குதல்.

(6)
சாலோக மாதி சவுக்கியமும் விட்டநம்பால்
மேலான ஞானஇன்பம் மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தானாள் உலகம், தன் அண்மை, தன்னுரு வெய்தல் ஆகிய சாலோகம், சாமீபம், சாரூபங்களாகிய வழிப்பேறுகளை நீங்கித் தானாதலாகிய சாயுச்சியம் எனப்படும் விழுப்பேறெய்தி மேலான உணர்வின்பம் மேவுநாள் எந்நாளோ? தான் - சிவன்.

(7)
தற்பரத்தி னுள்ளேயுஞ் சாலோக மாதியெனும்
பொற்பறிந்தா னந்தம் பொருந்துநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) சிவமாந் தன்மை எய்திய பின்னரும் அறிவு நிலைச் சீலமுதலியன வுண்மையால் அதற்குரிய பேற்று நிலைகளை யறிந்து அதன் மேலாகிய திருவடிப் பேரின்பம் பொருந்துநாள் எந்நாளோ?

(8)
உள்ளத்தி னுள்ளேதான் ஊறுஞ் சிவானந்த
வெள்ளந் துளைந்து விடாய்தீர்வ தெந்நாளோ.