பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

647
திருப்பாசுரத்தினுடைய பெரிய எண்பெரு வடிவாம் பெருநிலையினைக்கண்டு, திருவருள் நிலையினையடைவது எந்தநாளோ?

    (வி - ம்.)விழுமிய முழுமுதல்வனாம் சிவபெருமான் அனைத்துலகங்களோடும், ஆருயிர்கள் எல்லாவற்றுடனும் ஒன்றாய் வேறாய் உடனாய் நின்றருளும் மெய்ப்புணர்ப்பினனாகலின் ஒப்பரிய அப்பர் பெருமானார் செந்தமிழ்த் திருமாமறையாம் தேவாரத்தினுள் நின்ற திருத்தாண்டகப் பகுதியில் "இருநிலனாய்த் தீயாகி" எனத் திருவருளால் பாடியருளினர். அப்பெரு மறையினை ஈண்டு நினைவூட்டி நம் தாயுமானச் செல்வர் ஓதியருளினர். இத் திருப்பதிகத்தினைத் திருக்கோவில்களிலும், திருமடங்களிலும், பொது நிலையங்களிலும், திருமனைகளிலும் சிறப்புற ஓதிவருதல் வேண்டும். இது பொருளுணர்த்து முறையில் திருவுருத்திரத்தின் தன்மையினும் மிக்கது. அதனால் உருத்திரசெபம் போன்று எல்லாக் காலங்களிலும் ஓதிவருதல் வேண்டும்.

(1)
அற்றவர்கட் கற்றசிவன் ஆமென்ற அத்துவித
முற்றுமொழி கண்டருளில் மூழ்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) முற்றத்துறந்த மூதறிஞராம் சிவனடியார்கட்கு முழுவதும் தன்னைக்கொடுத்து முன்னின்றருளும் சிவபெருமானா ரென மெய்ப்புணர்ப்புண்மையினை மொழிந்தருளிய அருணந்தி சிவநாயனார் திருமொழியினை உள்ளத்துணர்வினிற் கண்டு திருவருளிற் கலந்து முழுகுநாள் எந்நாளோ?

    (வி - ம்.) அருணந்தி சிவநாயனார், சகலாகம பண்டிதர், மெய்கண்ட தேவநாயனாரின் மாணவர் நாற்பத்தொன்பதின்மருள் தலையாயவர். சித்தாந்த நூல்கள் பதினான்கனுள் "சிவஞான சித்தியார், இருபா இருபது" என்னும் இருபெரு நூல்களை இயற்றியருளிய எழிற் செல்வர். மெய்கண்ட நூல்கள் தனித் தமிழாகமங்கள். "அற்றவர் கட் கற்றசிவன்" என்னுந் தொடர் வருமாறு:

"உற்றவர் பெற்றவ ரற்றவர் முற்றும்
 அற்றவர்க் கற்றவன்"
- இருபா இருபது, 20.
(2)
தானென்னை முன்படைத்தான் என்ற தகவுரையை
நானென்னா உண்மைபெற்று நாமுணர்வ தெந்நாளோ.
    (பொ - ள்.) நம்பியாரூரர் திருவருளால் பாடியருளிய தனித் தமிழ்த் திருப்பாட்டாம் திருமாமறைக்கண் "தானென்னை முன் படைத்தான்" எனத் திருவாய் மலர்ந்தருளினர். அத்தகைய மந்திரவுரையை நானென்னும் முனைப்புத் தோன்றாது சிவனுக்கு அடிமை யென்னும் உண்மை பெற்றுத் திருவருளை அதன்வாயிலாக நாமுணர்வ தெந்நாளோ?

    (வி - ம்.) நம்பியாரூரர் அருளிய அத் திருப்பதிகத்தின்கண் திருவருளுணர்வு கைவந்த நற்றவத்தவர், தம்முடலையும், தம்முயிரையும் முறையே சிவனுடைமையும் அடிமையுமாகக் கொண்டொழுகுதலால் அவற்றைச் சிவமாந் தன்மையாகக் கொள்வர். அதனால் அவர்கள்