திருவடியுணர்வோடு இரண்டறக் கலந்து ஒன்றாகி நிலைநின்றுவிடும் என்றருளிய நன்னெறியினைக் கடைப்பிடித்து நிற்குநாள் எந்நாளோ?
(8)
ஆதியந்த மில்லா அரியபரஞ் சோதிஎன்ற | நீதிமொழி கண்டதுவாய் நிற்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) திருவெம்பாவைத் திருப்பாட்டின்கண் "ஆதியந்த மில்லாத அரிய பெருஞ் சோதி"யென்ற நீதிமொழியினைக் கண்டு அப்பெருஞ் சோதியின்கண் உறுதியாக நிற்குநாள் எந்நாளோ?
(9)
பிறிதொன்றி லாசையின்றிப் பெற்றிருந்தேன் என்ற | நெறியுடையான் சொல்லில்நிலை நிற்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) உலகியற் பொருள்களில் சிறிதும் பற்றில்லாமல் திருவடி நிலையினைப் பெற்றிருந்தேனென்று அருளிச் செய்கின்ற நன்னெறியுடையான் திருமொழியின்வழி நிற்குநாள் எந்நாளோ?
(10)
திரையற்ற நீர்போல் தெளியஎனத் தேர்ந்த | உரைபற்றி உற்றங்கு ஒடுங்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) அலையொடுங்கிய நீர்போன்று வினையொடுக்கம் திருவருளால் (கன்மவொடுக்கம்) எய்தி மவுனமாய் இருந்து தெளிக வென்றருளிய அந்த அருளிப் பாட்டினைச் சேருநாள் எந்நாளோ?
(11)
அறியா அறிவில் அவிழ்ந்தேற என்ற | நெறியாம் உரையுணர்ந்து நிற்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) சுட்டுணர்வினாலும் சிற்றுணர்வினாலும் அறியவொண்ணாத மெய்ப்பொருள் அதனறிவாம் முற்றுணர்வால் அறியப்படும். அவ்வறிவின்கண் அழுந்தும் நெறியினை யுணர்ந்து நிற்குநாள் எந்நாளோ?
(12)
எனக்குள்நீ என்றும் இயற்கையாப் பின்னும் | உனக்குள்நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ. |
(பொ - ள்.) (ஆருயிர்கள் கட்டு நிலையில் இருவினைத் தொழில்களை ஈட்டலுந்துய்த்தலும் செய்து கட்டறுத்தற்பொருட்டு முதல்வன் அவ்வுயிர்களினுள் மறைந்து நின்றருள்வன்) அம் முறையில் (ஆருயிர்கள்) எனக்குள் நீயென்று நிற்கும் இயற்கைபோல் (ஒட்டு நிலையில் திருவடித்துய்ப்பின் பொருட்டு அவ்வுயிர்களைத் தன்னுள்ளடக்கித் தான் முன்னருள்வன் சிவன்) ஒட்டு நிலையில் உனக்குள் நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ?
(13)
அறிவை அறிவதுவே யாகும் பொருளென்று | உறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ. |