பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

652
கீழ் நீரிலுற்ற நிழல் வேறுகாணப்படாது நீருடன் விரவி ஒன்றாய் நிற்பது போன்று 1 அடியேன் கலந்து நிற்பது எந்நாளோ?

(9)
எட்டத் தொலையாத எந்தைபிரான் சந்நிதியில்
பட்டப் பகல்விளக்காய்ப் பண்புறுவ தெந்நாளோ.
    (பொ - ள்.) அன்பரல்லாதார் எவராலும் காணுதற்கரிய எந்தையாகிய சிவபெருமான் திருவருட்டிரு முன்னில், பட்டப்பகலில் அடங்கி நிற்கும் விளக்குப் போன்று அடியேன் திருவடிக்கண்ணடங்கி இன்ப நுகர்வன்றி வேறு செயலற்றிருக்கும் பண்பு பெற்றுய்வது எந்நாளோ?

    (வி - ம்.) பகல்விளக்கென்னும் ஒப்பு இன்பன்றிச் செய்கையில்லாமை பகல் விளக்காம், அன்பின்பத் தாழுமுயிர்க் கங்கு என்னும் முறையில் விளக்குப் புறவிருளைப் போக்கிப் புறப்பொருளை நோக்குவிக்குந் தன்மைத்து. அவ் விளக்கின் புறத் தொழில் அடங்கித் தன்னினமாகிய அஞ் ஞாயிற்றினைக் காண்பதில் நிகழ்கின்றது. கண்டு அதனுள் அடங்கி இன்புறுகின்றது. ஆனால் அவ்விளக்கொளி அழிந்துபடவில்லை. அதுபோல் ஆருயிரும் பேருயிராம் சிவபெருமான் திருவடிக்கீழ்த் தலைமறைவாய் அடங்கி நிற்குங்கால் புறச்செயலற்று அன்பின்பாம் அகச்செயலாய் அழிந்துபடாமல் திருவடிப் பேரின்ப நுகர்வாய்ப் புணர்ந்து நிற்கும்.

(10)
கருப்புவட்டா வாய்மடுத்துக் கண்டார்நாப் போல
விருப்புவட்டா இன்புருவை மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) கருப்பு வெல்லத்தினை வாயினாலுண்டு அதன் சுவையைக் கண்டு பொருந்திய நாவினைப் போல் விருப்பம் நீங்காத பேரின்பப் பெருவடிவை அடியேன் திருவருளால் பொருந்து நாள் எந்நாளோ? விருப்புவட்டா - விருப்பு உவட்டா.

(11)
துச்சப் புலனால் சுழலாமல் தண்ணருளால்
உச்சிக் கதிர்ப்படிகம் ஒவ்வுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) (உலகியற் பொருள்களில் பற்றுக்கொண்டுழல்வது சிறுபுலன் எனப்படும். அத்தகைய) புலன் விருப்பமாகிய சிறுமையிற் பட்டு உழன்று துன்பப்படாமல் என்றும் மாறாக் குளிர்ச்சி பொருந்திய திருவருளால் ஞாயிறு உச்சியில் வருங் காலத்துப் பளிக்குத்தூண் ஞாயிற்றொளியினைப்பற்றி அவ்வொளியாய் நிற்பது போன்று திருவடியைப் பற்றி அத் திருவடிப் பேரின்பமாக நிற்பது எந்நாளோ?

    (வி - ம்.) ஆருயிர், பளிங்கனைய அறிவுப் பொருள். பளிங்குத்தூண் ஞாயிற்றின் கதிர் காலை மாலைகளில் சாய்வாய் விழுவதால் புறத்தே யுள்ள நிறங்களைப் பற்றித் தான் அந்நிறமாக நிற்கின்றது. இதுபோல் ஆருயிர் இருவினைக் கீடாகப் பிறப்புற்று முனைப்புடன் நிற்குங்கால் வனப்பாற்றலாகிய பராசத்தி நடப்பாற்றலாகிய திரோதான சத்தியாய் நின்று சாய்வுக்கதிர் போல் உலகியற் பொருள்களைப் பற்றச் செய்கின்றது.

 1. 
'இல்லாமுலைப்பாலும்.' சிவஞான போதம், 8. 2 - 3.