பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


667


சோதியே நந்தாச் சுகவடிவே தூவெளியே
ஆதியே என்னை அறியவைத்தால் ஆகாதோ.
     (பொ - ள்) இயற்கைப் பேரொளிப் பிழம்பே, அழிவில்லாத பேரின்பப் பெருவடிவே, தூய அறிவுப் பெருவெளியே. முழு முதலே நின்திருவடியை அடியேனுக்கு அறிய வைத்தால் ஆகாதோ?

(8)
நேசஞ் சிறிதுமிலேன் நின்மலனே நின்னடிக்கே
வாசஞ் செயஇரங்கி வாவென்றால் ஆகாதோ.
     (பொ - ள்) வேண்டத் தக்க அன்பு ஒரு சிறிதும் இல்லேன்; மலமணுகாத தூயோனே, நின்திருவடியில் உறையுமாறு இரக்கங்கொண்டு வாவென்று அழைத்தருளினால் ஆகாதோ?

(9)
என்னறிவுக் குள்ளே இருந்ததுபோல் ஐயாவே
நின்னறிவுள் நின்னுடன்யான் நிற்கவைத்தால் ஆகாதோ.
     (பொ - ள்) அடியேனுடைய உணர்வினுக்குள்ளே தேவரீர் இருந்தருளிய தன்மைபோல், முதல்வனே எளியேன் நின் அறிவினுக்குள் அடங்கிப் புணர்ப்பாக நிற்கும்படி செய்தருளினால் ஆகாதோ? புணர்ப்பு - அத்துவிதம்.

(10)
ஆதிப் பிரானேஎன் அல்லல் இருளகலச்
சோதிப்ர காசமயந் தோற்றுவித்தால் ஆகாதோ.
     (பொ - ள்) ஆதியை உடைய பெருமானே, ஏழையேன் படும் துன்பங்களெல்லாம் பழமல இருளால் வருவன. அதனால் அவ்விருள் அற்று ஒழியும்படி பேரொளிப் பெருவிளக்காய் அடியேனுக்குத் தோன்றும்படி காட்டியருளினால் ஆகாதோ?

(11)
ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயாநின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.
     (பொ - ள்) மண்ணுலக ஆசையாகிய சுழி பொருந்திய பிறவிப் பெருங்கடலுள் 1 அடியேன் ஆழ்ந்துவிடாமல் ஐயனே அக் கடலை நீந்துதற்குரிய நின்திருவடிப் புணையைத் தந்தருளி அதனை நிறுத்தினாலாகாதோ?

(12)
பாசநிக ளங்களெல்லாம் பஞ்சாகச் செஞ்செவே
ஈசஎனை வாவென் றிரங்கினால் ஆகாதோ.
     (பொ - ள்) பாசத் தொடர்பான விலங்குகளெல்லாம் அற்றுப் பஞ்சாகப் பறந்துபோம்படி உடையவனே செவ்வையாக எளியேனை வாவென்றழைத்து இரங்கினால் ஆகாதோ?

(13)
 
 1. 
'தனியனேன்.' 8. திருச்சதகம், 27. 
 " 
'பிறவிப்.' திருக்குறள், 10,