பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


684


நீங்கிவிடும். இவ்வுயிர் வாழ்க்கையில் ஏற்படச் கூடிய குணமேது? இன்ப நலமேது? நீ கூறுவாயாக.

(16)
கலமேதும் அறியாத என்னைச் - சுத்த
    நாதாந்த மோனமாம் நாட்டந்தந் தேசஞ்
சலமேதும் இல்லாமல் எல்லாம் - வல்லான்
    தாளால்என் தலைமீது தாக்கினான் தோழி - சங்கர
     (பொ - ள்) தோழியே! நலமென்பது சிறிதும் அறியாத அடியேனை, மிகவுந் தூய்மையாகிய முப்பத்தாறாம் மெய்யெனப்படும் நாத தத்துவத்திற்கு அப்பாலுள்ள மோன நிலையான நோக்கத்தினைக் கொடுத்து, மனக்கவலை இல்லாமல், எல்லாம் வல்லானாகிய சிவபெருமான் தன் திருவடியினை எளியேன்முடியின்மீது வைத்துச் சிவதீக்கை1செய்தருளினன்.

(17)
தாக்குநல் லானந்த சோதி - அணு
    தன்னிற் சிறிய எனைத்தன் னருளாற்
போக்கு வரவற் றிருக்குஞ் - சுத்த
    பூரண மாக்கினான் புதுமைகாண் மின்னே - சங்கர
     (பொ - ள்) பெண்ணே! திருவருள் தொடத்தகுந்த பேரின்ப மயமான அருட்பெருஞ்சோதி, மண் எனப்படும் அணுவினும் மிகவுஞ் சிறியேனாகிய அடியேனைத் தன்னுடைய பெருந்தண்ணளியால் போக்கு வரவு எனப்படும் இறத்தல் பிறத்தல்கள் அற்றிருக்கின்ற முழு நிறைவான தன் திருவடிக்கீழ் இருக்கச் செய்தருளினன்.

(18)
ஆக்கி அளித்துத் துடைக்குந் - தொழில்
    அத்தனை வைத்துமெள் ளத்தனை யேனுந்
தாக்கற நிற்குஞ் சமர்த்தன் - உள்ள
    சாட்சியைச் சிந்திக்கத் தக்கது தோழி - சங்கர
     (பொ - ள்) தோழியே! முழுமுதல்வன் நிலைத்திணைப் பொருள்களையும், இயங்குதிணைப் பொருள்களையும் மாயா காரியமாகத் தன்திருவுள்ளத் திருக்குறிப்பால் படைத்தும், காத்தும், துடைத்தும் வரும் தொழில் முழுவதையும் தன்பாற் கொண்டிருந்தும், அவற்றில் சிறிதும் தொடக்குறாது நின்றருளும் வியத்தகு திறலுடையவன். அப் பெருமான் சான்றாக நின்றருளும் தன்மை எஞ்ஞான்றும் நினைக்கத்தக்கது.

(19)
சிந்தை பிறந்ததும் ஆங்கே - அந்தச்
    சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே
எந்த நிலைகளும் ஆங்கே - கண்ட
    யான்றான் இரண்டற் றிருந்ததும் ஆங்கே - சங்கர
 
 1. 
'நினைந்துருகும்.' 6. 14 - 1. 
 " 
'நன்மைபெருகு.' 12. அப்பர் - 195.