பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


86


         "மந்த்ரகுருவே - மௌனகுருவே" - செந்தமிழ் மறையருள் மந்திர குருவே அகத்தவ இறைவனூ லருள் யோகதந்திர குருவே (தனித் தமிழாகமம் அருள்) திருமூலர்மரபில் வந்தருளிய மௌனகுருவே, (இவ்வுரையினை இத்தலைப்பு முடியும் வரை கூட்டிக் கொள்க.)

     (வி - ம்) ஆசை - அவா. நிகளம் - விலங்கு; சங்கிலி. நீர்த்தூளி - முழு அறிவு; சருவநாசம். எற்றி - எறிந்து. விலாழி - யானைத் துதிக்கை உமிழ்நீர். சுளித்து - சினந்து. படாம் - சீலை. நூறி - நசுக்கி. சின்முத்திரை - அறிவடையாளம். தந்திரம் - இறைவனூல்.

     இப் பாட்டால் பெறப்படும் உருவகம் வருமாறு:

     ஆசை - சங்கிலி. ஆங்காரம் - முளை. அத்துவிதம் - மதம். மதம் ஆறு - ஆறுயாறுகள். பாசம் - நிழல். மனம் - கவனம். மாயை - முக படாம். சின்முத்திரை - தோட்டி. ஆருயிர் - மத்தயானை.

    ஆசையெனினும் அராகம் எனினும் ஒன்றே. அவ்வுண்மை வருமாறுணர்க :

"விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண்
 இச்சையைப் பண்ணி நிற்குந் தொழிலறி விச்சை மூன்றும்
 வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி யான்மா
 நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்பன் அன்றே."
- சிவஞானசித்தியார், 2. 3-6.
"தூசா மணியுந் துகிலும் புனைவாள்
 நேசா முருகா நினதன் பருளால்
 ஆசா நிகளந் துகளா யினபின்
 பேசா அனுபூதி பிறந் ததுவே."
- கந்தரனுபூதி. 43
"அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
 வஞ்சிப்ப தோரும் அவா."
- திருக்குறள், 1 - 66.
"ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
 ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
 ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
 ஆசை விடவிட ஆனந்த மாமே."
- 10. 2570
முக்கூற்றுப் புறச்சமயங்கள் மூன்று :

    (புறப்புறம்) - உலகாயதம், மாத்தியமிகர், யோகாசரர், சௌத்திராந்திகர், வைபாடிகள், (பௌத்தம்) ஆருகதர்.

    (புறம்) தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம்.