பக்கம் எண் :

110

             காப்புப் பருவம்

    திருநாளைப்போவார் ஆதனூரினர்.  திருத்தில்லை நாதன் அருளால் நாளைப் போவேன் என்று கூறி வந்தவர்.  புலைய மரபினர்.  ஆலயத்துப் புறத்தே நின்று தொண்டு செய்தவர்.  தில்லை மூவாயிரவர் கைகூப்ப முனிவராய்த் திகழ்ந்தவர்.

    திருக்குறிப்புத் தொண்டர் காஞ்சிப்பதியினர்; வண்ணார மரபினர்.  அடியார் ஆடையை வெளுத்துத் தருபவர்.  மழை பெய்து கொண்டிருந்தால் நான் இறப்பேன் என்று கூறிப் பாறையில் முட்டும் அன்பர்.

    சண்டேசுரர் திருச்சேய்ஞ்ஞலூரினர். தந்தையின் தாள்களை வெட்டியவர்.  ஈசன் திருமுடியில் பால் சொரிந்து மலர் இட்டு வழிபட்டவர்.

    திருநாவுக்கரசர் திருவாமூரினர்.  திருவீரட்டர் திருவடி உற்றவர்.  திருநல்லூர் சிவனார் திருவடி முடிமேல் சூடப்பெற்றவர்.  விடத்தினை அமுதாக உண்டவர்.  திருமறைக்காட்டின் கதவைத் திறந்தவர்.  கல்லைக் கடலில் மிதக்கச் செய்தவர்.

    குலச்சிறையார் சமணர்களைக் கழுவில் ஏற்றுவித்தவர்.  தமிழ் மொழி அறிந்தவர்.  மணமேற்குடி என்னும் ஊரினர்.  பாண்டியன் அதிகாரி.

    பெருமிழலைக் குறும்பர் சுந்தரர் கயிலைக்கு ஏகும்போது, அவர்க்கு முன் கயிலை செல்வேன் எனக் கயிலை சென்றவர்.

    காரைக்கால் அம்மையார் இவர்கயிலையைக் காலால் மிதித்து ஏறேன் எனத் தலையால் நடந்து செல்கையில் உமை அம்மையார் நகைத்தபோது, ‘இவர் என் அம்மை’ என்று இறைவனால் அழைக்கப்பட்டவர்.

    அப்பூதியார் திங்களூர் வேதியர்.  திருநாவுக்கரசர் திருவடிகளே செல்வம் எனப் போற்றியவர்.  தண்ணீர்ப் பந்தர்க்குத் திருநாவுக்கரசர் எனப் பெயரிட்டவர்.