பக்கம் எண் :

தன

18

               பாயிரம்

தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்
    தவறுநலம் பொருளின்கண் சார்வாராய்ந் தறிதல்
இன்மையினார் பலர்புகழின் ஏத்துவர்ஏ திலார்உற்
    றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கென ஒன்றிலரே

என்பது அப்பாடல்

    இன்னோரன்ன பொருட் பொலிவு செறிந்திலகலின், இதனைத் “தேங்கு சிவப்பிரகாசம்” என்றனர். ‘முதலிய வாய் மலர்ந்து’ என்றது, உமாபதிசிவம் சிவப்பிரகாசமேயன்றிச் சித்தாந்த சாத்திரங்களான திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, கங்கற்ப நிராகரணம் ஆகிய பிற நூல்களைச் செய்ததைக் குறிப்பிட்டே என்க.  உண்மைநெறி விளக்கத்தையும் இவர் செய்தனரெனக் கூறும் மரபும் உண்டு.  இவ்வெட்டு  நூற்களைச் சித்தாந்த அட்டகம் என்பர்.

    திரு. பிள்ளை அவர்கள், உமாபதி சிவத்தை இங்ஙனம் பன்னிப்பன்னிக் குறிப்பிட்டதன் கருத்துச் சேக்கிழார் பெருமானாருடைய வரலாற்றைப் புராணமாகப் பாடித் தந்த காரணத்தால் என்க.  திரு பிள்ளை அவர்கள், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடுதற்கு அது பெருந்துணையாக அமைந்தது.

    உமாபதி சிவாசாரியார், சிதம்பர தீட்சிதர் மரபில் தோன்றியவர்.  இவர் தென் மொழி, வட மொழிகளை நன்கு பயின்றவர்.  தில்லைக் கூத்தப் பெருமானைப் பூசனை புரிந்து வந்தவர்.  இவர் சித்தாந்த சாத்திர நூல்களைப் பாடிய தோடின்றிக் கோயில் புராணம், திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராண  வரலாறு என்னும் சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிகக் கோவை பௌட்கராகம வியாக்கியானம் ஆகியவற்றையும் அருளிச் செய்தவர்.  இவர் சோழ அரசரால் முத்துப் பல்லக்கு, மேளதாளம், தீவட்டி ஆகியவற்றை அடைந்தவர்.  ஸ்ரீ மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை, உபதேசம் முதலியவற்றைப் பெற்றவர்.