வ
விளக்கம் :
தால் என்பது
நாக்கு. அந்நாக்கை அசைத்து ஓசை எழுப்பிக் குழந்தைகளை உறங்க வைக்க முயலுவதால் இப்பருவம் தாலாட்டுப்
பருவம் எனப்பட்டது. இஃது எட்டாம் மாதத்தில் நிகழ்த்தும் செயல். “ எட்டாம் திங்களில்
இயல் தாலாட்டும் “ என்பது பிங்கலந்தை.
முத்துக்கள் பிறக்கும்
இடம் பலவாகும். இதனை,
தந்தி வராகம்
மருப்புஇப்பி பூகம் தனிக்கதலி
நந்து சலஞ்சலம் மீன்தலை
கொக்கு நளினம்மின்னார்
கந்தரம் சாலி கழைக்கன்னல்
ஆவின்பல் கண்செவிகார்
இந்து உடும்பு கராமுத்தம்
ஈனும் இருபதுமே
என்ற பாடலால் உணரலாம்.
உரறுதல் என்னும்
சொல் ஒலித்தல் என்ற பொருளில் வருதலை, “ உரும் உரறும் கருவிய பெருமலை “ என மலைபடு கடாத்திலும்,
நந்துதல் செருக்குதல் என்னும் பொருளில் வருதலை, “ நந்திச் செறில் சாம்புவன் “ எனக் கலித்தொகையிலும்
வருதலைக் காண்க.
ஈண்டுச் சிப்பி ஈன்ற
முத்தைப்பற்றிக் கூறப்படுகிறது. இவ்வாறே பகழிக் கூத்தரும் தமது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்
தமிழில் “ கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள் கரையில் தவழ்ந்து வாலுகத்தில் கான்றமணி “ என்றனர்.
அன்னத்தின் அலகு செம்மை நிறமாக இருத்தல் பற்றி “ துவர் என்று உவமிக்கும் வாய் ஓதிமம் “ என்றனர்.
அன்னத்திற்கு எப்போதும் உயர்ந்த ஆதனத்தில் அமர்தல் விருப்பம்போலும் ! தாமரை மலரில்
வீறுடன் வீற்றிருக்கும் இயல்பைத் திருஞான சம்பந்தர் அழகுபட,
செறிஇதழ்த் தாமரைத்
தவிசில் திகழ்ந்தோங்கும்
இலைக்குடைக்கீழ்ச்
செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச் சாமரைஇரட்ட
இளஅன்னம்
வீற்றிருக்கு மிழலை
யாமே
என்று பாடியருளினர்.
|