பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

29

தியாகர் சந்நிதி விசேடமானது.  அவர் வீதி விடங்கர் எனப் படுவார்.  இவர் திருமாலால் பூசிக்கப்பட்டுப் பின், இந்திரனால் பூசிக்கப்பட்டுப் பின்   முசுகுந்த சக்ரவர்த்தியினால் இந்திரனிடமிருந்து கொணரப்பட்டு, இங்குத் தாபிக்கப்பட்டவர்.  இவரது நடனம் அசபா நடனம் எனப்படும்.  அதாவது நமது மூக்கு வழிவந்து போகும் ரேசக பூரகக் காற்றை போன்ற அசைவுடைய நடனம் என்பது.  இத்தலம்  பஞ்சபூத தலங்களுள் பிருதிவி தலமாகத் திகழ்வது.  மூலட்டான மூர்த்தி புற்றுமண்ணாக இருத்தலை, இன்றும் காணலாம், இத்தலம் பூங்கோயில் எனப்படும்.  உச்சிக் காலத்தில் பவனி விடங்கற்கும் பூசை நடைபெறும்.  இங்கு மனுநீதி கண்ட சோழன் தன் நீதியை நிலைநிறுத்தும் பொருட்டுத் தன் மகனைக் கீழே கிடத்தித் தேரைச் செலுத்திய நிகழ்ச்சி, கல் சித்திரமாக இன்றும் காட்சி அளிக்கிறது.  இங்குப் பிறந்தவர்களும் பிறப்பவர்களும், சிவகணங்களாகக் கருதப்படுவர்.  இதனால்தான் சுந்தரர்  “  திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் “  என்றனர்.  இங்குள்ள ஆயிரக் கால் மண்டபமே தேவாசிரிய மண்டபம் எனப்படும்.  திருவாரூர் கோயில் குளமாகிய கமலாலயத்தின் நடுவிலும் ஒரு கோவில் உண்டு.  சுந்தரர் தாம்பெற்ற பொன், மாற்றில் குறையாதது என்பதை உரைத்துக் காட்டிய விநாயகர் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயருடன் குளக்கரையில் இன்றும் துலங்கிக் கொண்டுள்ளார்.  மூவர் முதலிகளும்  இத்தலத்திற்கு மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளனர்.  இங்குச் செங்கழுநீர் ஓடை என்னும் பெயருடைய ஓடையும் ஓடுகிறது.  இத்தலம் திருவாரூர் ஸ்டேஷனுக்கு வடமேற்கே கற்சாலையில் ஒருகல் தொலைவில் உள்ளது.  இந்தத்தலத்தின் இரண்டாம் பிராகாரத்தின் தென் கிழக்கில் மேற்கு மூலையில் அமைந்துள்ள கோயில், திருவாரூர் அறநெறி எனப்படும்.  இதனை அப்பர் பெருமானார் பாடியுள்ளார்.  இத்தலத்து இறைவர் அகிலேசர் என்றும், இறைவியார் அகிலேசுவரி என்றும் பெயர் பெற்றவர்கள்.  இந்த இறைவர்க்குத் திருவாரூர் குளத்தின் நீரையே நெய்யாக ஊற்றித் திருவிளக்