பக்கம் எண் :

296

       தாலப் பருவம்

 

காரத்தின் மூலம் நன்கு உணரலாம்.  தவம் என்பதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்,
“ அஃதாவது மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, விரதங்களால் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில் நிலைநிற்றலும், மாரியிலும் பனியிலும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பின் உயிர்களை ஓம்புதல்” என்றனர்.  மணக்குடவரும் இக்கருத்தினைப் போலவே, “தவமாவது, ஊனும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பனியும் தாங்கலும் தேவர் வழிபாடு முதலியனவும் மேற்கொண்டு முயலல்” என்றனர்.  சிறுபஞ்சமூலம்,

    உயிர்நோய் செய்யாமை உறுநோய் மறத்தல்
    செயிர்நோய் பிறர்கண் செய்யாமை-செயிர்நோய்
    விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்
    இழிவன் றினிது தவம்

என்கிறது.

    “விழுப்பொருள் ஞாலம் நோற்பவருக்கு உரியவாகும்” என்பது சிந்தாமணி.  “வேண்டிய விளைத்துக் கொள்ளும் விழுத்தவம்” என்பது சூளாமணி.  “வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம்” என்பது கம்பர் வாக்கு.  “பண்ணிய தவத்தால் அன்றி யாதாலும் படுபொருள் பிறிதில்லை” என்பது திருவிளையாடல் புராணம்.

    அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
    முத்தியை நல்கியே முதன்மை ஆக்குறும்
    இத்துணை அன்றியே இம்மை இன்பமும்
    உய்த்திடும் உளந்தனில் உன்னும் தன்மையே

என்பர் கச்சியப்ப சிவாசாரியார்.  இவை யனைத்திற்கும் காரணமாய் நின்ற குறள்,

    “வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
     ஈண்டும் முயலப் படும்”

என்பது.