பக்கம் எண் :

New Page 1

298

             தாலப் பருவம்

    தேவரே அனையர் கயவர் அவரும்தாம்
    மேவன செய்துஒழுக லான்

என்ற குறளைக்கொண்டு நன்கு தெரியலாம்.  இங்ஙனம் இருக்கத் தேவர்களையும் உயர்திணையர் என்று அறுதியிட்டு, உறுதியாகக் கூற முடியுமோ? இவ்வாறு உயர்திணைக்குரியவர்களைக் குறிப்பிட்டிருப்பது தவறு. பவணந்தியார்க்குத் தோல்வியுமாகும். ஆனால், தொல்காப்பியர் மிகவும் விழிப்புடன் மக்கள் பண்பு எவ்வுயிரிடத்தும் இருப்பினும், அவ்வுயிர் உயர்திணையே ஆகும் என்ற கருத்தில்தான், “உயர்திணை என்பனார் மக்கட் சுட்டே” என்றனர்.  தேவர்களும் “மக்கட் சுட்டு இலரேல், அவர்களும் உயர்திணை ஆகார் என்பது அவரது கருத்து.  இங்ஙனம் அவர் விழிப்புடன் இலக்கணம் வகுத்திருத்தலின் “தோலாநா” என்று அடை கொடுத்துப் பேசப்பட்டனர்.

    இந்தத் தொல்காப்பியமே தமிழ் மொழிக்கு இலக்கண நூலாகும்.  இதற்குமுன் இருந்த அகத்தியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் ஆகாதோ எனில், அவ்வகத்தியம் முற்ற முடிய அமைந்த நூலாக நாம் பெறுதற்கு இல்லா நிலையில் இருத்தலின், அதனையே தமிழ் இலக்கியங்கட்கு இலக்கணமாகக் கொள்ள அத்துணைப் பொருத்தமாகக் காணப்படாது.  ஆகவே, திரணதூமாக்கினியார் எழுதிய தொல்காப்பியமே தமிழ் இலக்கியங்கட்கு இலக்கணமாகக் கொள்க.  இக்கொள்கை பற்றியே ஈண்டுத் திரு பிள்ளையவர்கள் பெரிய புராணத்திற்குரிய இலக்கண அமைப்புத் தொல் காப்பிய இலக்கண அமைப்பே என்ற கருத்தில் “தொல்காப்பியமே தோன்றும் இலக்கணமா” என்று கூறினர்.  இதற்குச் சான்றுகள் பலவாக இருப்பினும், இரண்டினை மட்டும் ஈண்டு எடுத்துக் காட்டுவோமாக.

    தொல்காப்பியத்தில் குறிஞ்சி முதலிய திணைகளுக்குரிய தெய்வங்கள் இன்ன என்பதைக் கீழ்வரும் நூற்பாவால் அறியலாம்.