பக்கம் எண் :

New Page 1

 

       சப்பாணிப் பருவம்

399

    பெரிய புராணத்தில் உபதேச முறையில் அமைந்த கவிகள்பல உள்ளன.  அவை உயிர்களைப் பற்றியுள்ள பல பந்தங்களை நீக்கவல்லன.

    ஊன டைந்த உடம்பின் பிறவியே
    தான டைந்த உறுதியைச் சாருமால்
    தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
    மாநா டம்செய் வரதர்பொற் றாள்தொழ

என்பது உயிர்களைப் பற்றிய மலத்தை நீக்கச் செய்யும் உபதேசம் ஆகும்.  இவ்வாறே அன்றி அடியாரின் சரித்திர வாயிலாக உபதேசித்த உபதேசங்கள் பலவாகும்.  அவற்றுள் ஒன்று,

    கொண்டு வந்து மனைப்புகுந்து
        குலாவு பாதம் விளக்கியே
    மண்டு காதலின் ஆத னத்திடை
        வைத்த ருச்சனை செய்தபின்
    உண்டி நாலு விதத்தில் ஆறு
        சுவைத்தி றத்தினில் ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
        அமுது செய்ய அளித்துளார்

என்பது இல்லறத்தார்க்கு ஏற்ற உபதேசம் அன்றோ?

    மாநிலம்கா வலன் ஆவான் மன்னுயிர் காக்கும்காலை
    தானதனுக் கிடையூறு தன்னால்தான் பரிசனத்தால்
    ஊனமிகு பகைதிறத்தால் கள்வரால் உயிர்கள் தம்மால்
    ஆனபயம் ஐந்தும் தீர்த்துஅறம் காப்பான் அல்லனோ

என்பது அரசர்கட்கு ஏற்ற உபதேசம் மொழிகள் அல்லவோ? ஆகவே, சேக்கிழார் பெருமானார் போதகாசிரியர் ஆகின்றார்.  முன்பும் இவரது உபதேச மொழிகள் காட்டப்பட்டுள்ளன.  ஆண்டும் காண்க.

    திருஞானசம்பந்தர் சமணர்களுடன் சமய வாதம் புரிகையில் புனல் வாதமும் புரிந்தருளினர்.  அப்போது “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் திருப்பாடல் முதல் “நல்லார்கள்” என்று தொடங்கும் இறுதிப் பாடல் உள்பட பன்னிரண்டு திருப்பாடல்களைப் பாடி அருளினர்.