பக்கம் எண் :

பத

408

       சப்பாணிப் பருவம்

 

பதிகம் ஒன்றே உளது.  குழித்தலை இரயிலடியிலிருந்து தெற்கே மட்சாலை வழி ஆறரைகல் கடந்தால் இத் தலத்தை அடையலாம்.  இம் மலையைக் காகம் அணுகாதாம்.  பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை இடி பூசை நடந்து வருகிறது.  அகத்தியர் நடுப் பகலில் இறைவரைப் பூசித்து இறைவரின் காட்சியைக் கண்டனர்.  ஆதலின், நடுப் பகலில் இங்குச் சென்று வணங்கல் சிறந்தது.  இத்தரிசன விசேடத்தால் மாத்தியான சுந்தரர் என்ற பெயரையும் இறைவர் கொண்டுள்ளனர்.  இந்திரனால் உண்டாக்கப்பட்ட வேப்பமரம் ஒன்று இங்குளது.  அதனைத் தரிசித்தலும் சிறப்பாகும்.  வீரவாகு தேவர் இங்கு வீரப்பெருமாள் என்ற பெயருடன் துலங்குகின்றார்.

    திருவீங்கோய் மலை என்பது இப்போது திருவிங்கநாதமலை என வழங்கப்பட்டு வருகிறது.  அகத்தியர் ஈவடிவாய் இத்தலத்து இறைவரைப் பூசித்தனர்.  இறைவர் மரகதாசலர் ஆதலின், இம்மலை மரகத மலை எனவும்படும்.  இறைவியார் மரகதவல்லியார்.  காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை மத்தியானத்திலும் இத்தலத்தை மாலையிலும் ஒரே நாளில் தரிசித்தால் பெரும் பேறு உண்டாகும்.  இது குறித்தே “காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், மாலைத் திருவிங்கநாதர்” என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளது.  இத்தலத்தைக் குழித்தலை இரயில் அடியிலிருந்து வடக்கே அகண்ட காவிரியைக் கடந்து, இரண்டு கல்லில் இருக்கும் முசிரியையும் தாண்டி, மேற்கே கல் சாலையினை மூன்று கல் நடந்தால் அடையலாம்.  இதற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது.  சங்ககால நக்கீரர் திருவீங்கோய் மலை எழுபது என்னும் நூலைப் பாடியுள்ளனர்.  இத்தலத்தின் இறைவர் மாண்பு, திருஈங்கோய் மலை இயற்கைவளம் முதலியவற்றை அடியேன் அந்நூலுக்கு எழுதியுள்ள உரை விளக்கத்தில் பரக்கக் காணலாம்.  கார்த்திகை சோமவார தரிசனம் இத்தலத்திலும், மேலே குறிப்பிடப்பட்ட இரு தலங்களிலும் செய்தல் விசேடமாகும்.