பக்கம் எண் :

இக

 

        முத்தப் பருவம்

447

    இக் குறட்பாக்களின் விளக்கம் போன்று சிந்தாமணியும்,

        இடத்தொடு பொழுதும் நாடி
            எவ்வினைக் கண்ணும் அஞ்சார்
        மடப்படல் இன்றிச் சூழும்
            மதிவல்லார்க் கரிய துண்டே

என்கிறது.

    அரசர்கட்குப் பொருள் இன்றியமையாதது.  அதனைச் சேர்த்தற்கான வழிவகைகளைக் கூறும் பொறுப்பு அமைச்சனையே சார்ந்ததாகும்.  அரசர்கட்குப் பொருள் வருவாய்க் குரிய வாய்ப்புக்கள் இன்ன என்பது,

        “உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
         தெறுபொருளும் வேந்தன் பொருள்”

என்ற குறளால் தெரிய வருகிறது.  இக்குறட்பாவிற்குரிய விளக்கமே,

        அருள்கொடு புரக்கப் படும்குடி அன்போ
            டளித்திடும் ஆறினில் ஒன்றும்
        இருநிலத் தெடுத்த பழம்பொருள் உரிமை
            இன்றியே இறந்தவர் பொருளும்    
        மருவிய சுங்கப் பொருளும்ஒட் டலரை
            மாட்டிய பொருளும்ஈட் டுகஇப்
        பொருளறம் இன்பம் புகழ்தரும் பகையைப்
            புரட்டும்எவ் வினைகளும் முடிக்கும்

என்னும் விநாயக புராணப் பாடல்.

    இன்னோரன்ன அமைச்சர்க்குரிய பண்புகளைப் பெற்றவர் சேக்கிழார் பெருமானார்.  இவற்றையுடையவர் இவர் என்பதையே ஈண்டு ஆசிரியர் நன்கு எடுத்து இயம்பினர்.

    இமயம்போல் புகழ் என்பதை “இமயம்போல நிலீஇயரத்தைநீ நிலமிசையானே” என்ற புறநானூற்றில் காண்க.

(45)