அறிஞர் பெருமக்களுக்கு
இடையே அறிவீனர்களாம் அற்பர்கள் இருத்தலை உவமை காட்டியது பொருத்தமே. அன்னம் வெண்ணிறத்தது.
வெண்ணிறம் தூய்மையானது. தூய்மை அறிவு ஒளிக்கு உகந்தது. எருமை கருமையானது. கருமை அஞ்ஞானத்துக்கு
உவமையாவது. ஆகவே, உவமை அழகு உவத்தற்குரியது. மேலும், இப்பாடலில் வாளையின் அட்டகாசம்
மிகுதியாகக் கூறப்பட்டுள்ளது. எருமை குளத்தில் பாய்ந்ததனால் வாளை தென்னையில் மோதியது.
அப்படி மோதியதால் தென்னம் பழங்கள் குளத்தில் வீழ்ந்தனவாம். அங்ஙனம் வீழ்ந்த ஓசை கேட்டு
மேதிகள் பயந்து கரை ஏறினவாம். வாளைகள் குளத்தில் தூய்மையுடன் இருக்கையில், அதை விடுத்துத்
தென்னையினைத் தீண்ட வேண்டி ஆனமையின் தீட்டு உற்றனவாம். அத்தீட்டினைப் போக்க மேலும்
துள்ளி ஆகாய கங்கையில் நீராடியும் தீட்டுப் போகாமையினால், சந்திரமண்டலத்தையும் ஊடுறுவிச்
சென்று சந்திரனது அமுத தாரையுடன் கீழ் இறங்கினவாம். இத்துணையும் உயர்வு நவிற்சி அணியின்பால்
பட்டதாகும். வாளை மீனின் வன்மை இங்ஙனம் புகழ்ந்து கூறப்பட்டது.
ஆரியர் குழாத்துள்
பூரியர் உண்டு என்பதைத் திருவிளையாடற் புராணத்துள் அங்கம் வெட்டின படலத்துள் காணலாம்.
குலோத்துங்க பாண்டியன் அரசு செலுத்திவரும் நாளில், ஓர் வில்லாசிரியர் வில் வித்தை பயிற்றுவித்து
வந்தார். அவரைப் பற்றிப் பரஞ்சோதியார் கூறும்போது,
வாள்வினைக் குரவன்
அன்னான்
வல்அமண் விடுத்த
வேழம்
தோள்வினை வலியால்
அட்ட
சுந்தர விடங்கள்
தன்னை
ஆள்வினை அன்பும்
தானும்
வைகலும் அடைந்து
தாழ்ந்து
மூள்வினை வலியை
வெல்லும்
மூதறி வுடையன்
அம்மா
என்கிறார்.