பக்கம் எண் :

New Page 1  

470

       முத்தப் பருவம்

தேனுவைச் சுட்டினார்.  ஆகவே “அ” ஈண்டு உலகறி சுட்டாகக் கொள்ளலாம்.  காமதேனு திக்கெலாம் புகழும் புகழ்ச்சி வாய்ந்தது.  ஆதலின், “திக்கு நிகழ் அப்பசு” எனப்பட்டது.

    பாலாறு என்ற பெயர் சொல்லளவில் இருந்தது, உண்மையாகவே பால் பெருகி ஓடும் நிலையினைப் பெற்றமையின், “பெயரைப் புதுக்கும்” என்று கூறப்பட்டது.

    குறிஞ்சி, முல்லை நெய்தல்.  மருதம் என்று பகுத்துக் கூறப்படும் நான்கு நிலப் பொருள்களையும் தொண்டை நாடு தன்னிடத்துக் கொண்டமையால் பக்கு நவில் அருவளம் என்றனர்.  தொண்டை நாட்டின் வளம் இன்னது என்பதைச் சுருக்கமாகக் கச்சியப்பர்,

    செக்கரம் துடைமுடிச் சிவனுக்கு அன்பராய்த்
    தக்கவர் அறிஞர்கள் தவத்தர் செல்வராய்த்
    தொக்கவர் யாரும்வாழ் தொண்டை நாட்டினி்ன்
    மிக்கதோர் அணியியல் அதுவி ளம்புகேன்

என்று சுட்டியருளினர்.  மேலும், தொண்டை நாட்டின் நீர் வளம், நாட்டு வளம், நகர் வளம் காண விழைவார் பெரிய புராணத்துள் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்துள்ளும், கந்தபுராணத்துள்ளும், காஞ்சிபுராணத்துள்ளும் காண்க.

    சேக்கிழார் பெருமானாரைப் போலத் தொண்டை நாட்டின் சிறப்பைப் பாட எப்புலவராலும் இயலாது. அவரே

    ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த
    மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித்
    தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தை
    தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்பு சொல்
                                    வரைத்தோ 

என்று பாடுவாராயின், அது பிறநாட்டிற்கு அமையாப் பெருவளம் கொண்டது என்பதைக் கூறவும் வேண்டுமோ?