பக்கம் எண் :

சத

 

       வாரானைப் பருவம்

509

    சத்தியாய்ப் புவன போகம் தனுகர ணமும் உயிர்க்காய்
    வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும்
                                       அன்றே

என்கிறது.

    கருமமலமாவது உயிர்கள் எடுத்த தேகத்திற்கு முன்னிலைக் காரணமானது ;  பல புசிப்புக்களை உண்டாக்குவது ;  பிறப்பு இறப்புக்களைத் தோற்றுவிப்பது ;  ஆன்மாக்கள் தோறும் சென்று பொருந்துவது ;  மனமொழி மெய்களால் செய்யப்படுவனவற்றிற் குரிமையுடையது ;  புண்ணிய பாவங்கட்குக் காரணமானது ;  சம்ஹார காலத்தில் மாயா காரணத்திலே சென்று படிவது ;  மாயையோடு கூடிக் காரியப்படுவது ;  அரூபமாய் இருப்பது ;  சடமாய் உள்ளது.

    கன்மலமாகிய இஃது உயிர்களிடத்தில் காணப்படும் பல்வேறு இன்ப துன்பங்கட்கும் பிறவி மாற்றத்திற்கும் காரணம் என்று அறிதல் வேண்டும்.  இதனைச் சிவஞான சித்தியார்,

    இருவினை இன்ப துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து
    வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப யன்கள்

என்று எடுத்து மொழிதல் காண்க.

    ஆணவமாவது செம்பில் களிம்புபோலச் சீவனைப் பற்றி அறிவு முழுமையை மறைப்பது.  ஆனால், சிவபுண்ணிய மேலீட்டால் பக்குவப்படவல்லது; அதிக இருளாய் இருப்பது ;  ஆணவ இருள் தன்னையும் காட்டாது ;  பிறபொருளையும் காட்டாது ;  இருளாயினும் பிறபொருளைக் காட்டாது போயினும், தன்னையேனும் காட்டும்.  இது குறித்தே திருவருட்பயன்

    “ஒருபொருள் காட்ட திருள் ;  உருவம் காட்டும்
     இருபொருளும் காட்ட திது”

என்று விளக்குகிறது.

    மேலும், சிவஞானசித்தியார் இம்மலத்தின் இயல்பை,