New Page 1
“உருத்திர கணிகைமாராம்
பதியிலார் குலத்தில் தோன்றி” என்றும், சங்கிலியார் வேளாளர் மரபினர் என்பதை “மேலாம்
கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிறு கிழவர், பாலாதரவு தருமகளா ராகிப் பார்மேல் அவதரித்தார்”
என்றும் சேக்கிழார் வெளிப்பட உணர்த்தியுள்ளதை உணர்க.
அப்பூதி அடிகளார் வேதியர்
மரபினர். அப்பர் பெருமான் வேளாள மரபினர். “நின்ற மறையோர் அது கேளா” “ஆதிநான்மறை நூல்
வாய்மை அப்பூதியார்” என்று அப்பூதியார் வேதியர் என்பதையும், திருநாவுக்கரசர் குடியினைப் பற்றிப்
பேசுகையில் ‘மேதக்க நிலை வோளண்குலம்’ என்றும் சுட்டியுள்ளனர். இத்தகைய இருவேறு பட்டவர்கள்
இவர்கள். ‘இந்நிலையில் அப்பூதியார், வேளாளராம் திருநாவுக்கரசர்தம் திருவடிகளைப் பூசித்து,
அவர்திருவடி நீரை உள்ளுக்கும் உட்கொண்டார் என்றும், அவருடன் தாமும் அமர்ந்து உணவு உட்கொண்டார்
என்றும் சேக்கிழார் கூறுவதைக் காணும்போது இதனினும் சீர்திருத்தக்கருத்தை நாம் யாண்டு காண
இயலும்?
முனைவரைஉள் எழுந்தருளு
வித்தவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல்
தெளித்துள்ளும் பூரித்தார்
என்றும்,
மைந்தரும் மறையோர் தாமும்
மருங்கிருந் தமுதுசெய்யச்
சிந்தைமிக் கில்ல மாதர்
திருவமுது எடுத்து நல்கக்
கொந்தவிழ் கொன்றை
வேணிக் கூத்தனார் அடியாரோடும்
அந்தமிழ் ஆளியார்அங்
கமுதுசெய் தருளி னாரே
என்றும் பாடியுள்ளவற்றைக்
காண்க. இங்ஙனம் வேண்டுவார் வேண்டினது தம் நூலில் தருதலின், காமதேனு என்னப்பட்டனர் சேக்கிழார்.
உமாபதிசிவம் சிவஞானமுனிவர்
போன்ற அறிவுசான்ற ஞானியர்கள் வேண்டும் பொருளைச் சேக்கிழார் தம் பெரிய புராணத்தில்
தருகின்றார் ஆதலின், “தெள்ளு புலத்தர் பெறு காமதேனு” எனக் கூறுதலும் ஈண்டுப் பொருந்தும்.
|