பக்கம் எண் :

New Page 1

544

             வாரானைப் பருவம்

சேக்கிழார் சைவப் பயிர் வளர்க்கும்  கொண்டல்  என்பதில்  எள்ளளவும்  ஐயம் இல்லை.

புலவர் தன்முன் திருவலகு பணிமாறிப் புனிறகன்ற
நலமலிஆன் சாணத்தால் நன்குதிரு மெழுக்கிட்டு
மலர்கொய்து கொடுவந்து மாலைகளும் தொடுத்தமைத்து
பலர்புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்”

என்று அப்பர் புராணத்தும், “சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்கத் தாவில் சராசரங்கள் எலாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்” என்றும்,

    உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
        போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
    அணையும் ஐம்பொறி அளவினும்
        எளிவர அருளினை

என்றும் திருஞான சம்பந்தர் புராணத்தும் பாடிச் சைவப் பயிர் தழையச் செய்ததைக் காணவும்.

    சேக்கிழார் பெருமானார் இற்றைக்கு ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகட்கு முன்பு பெரிய புராணத்தைப் பாடிச் சைவப் பயிர் தழையைச் செய்தனர் ஆயினும், அப்புராணம் இன்றும் இனியும் சைவப் பயிரை வளர்த்து வருகின்றதாலும், வளர்த்து வரப் போவதாலும், ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் சைவப் பயிர் வளர்க்கும் எனச் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றால் அறிவித்துள்ளார்.  இவ்வாறுதான் கூறவேண்டும் என்பதற்கு விதி தொல்காப்பியத்தில் உண்டு அது.

    முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
    எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து
    மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்

என்பது,

    ஈண்டு வளர்க்கும் என்னும் சொல்லைக் கொண்டல், என்னும் சொற்கு அடையாகக் கொள்ளாது, அச்சொல்லுக்குப் பயனிலை சொல்லாகக் கொண்டு பொருள் காணவும்.