பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

55

    பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
    காலனைஅன் றேவிக் கராக்கொண்ட பாலன்
    மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
    கரணம்போல் அல்லாமை காண்.

எனக் குறிக்கப்பட்டிருப்பதிலிருந்து மூவர் முதலிகள் பாடல்கள் பசுகரணப் பாடல்கள் அல்ல,  அவை பதிகரண நிலையில் பாடப்பட்டவை என்பதை உணருகிறபோது, அப்பாடல்கள் வேதம் என்பது தானே பெறப்படுகிறது.  ஆகவே, வேதத் தமிழ்க்கண் எனப்பட்டது. 

    சேக்கிழார் மூவர் முதலிகளின் திருவாக்கின் உண்மைப் பொருளை உணர்த்திப்போவதில் வல்லுநர்.  திருஞான சம்பந்தரின் முதல் திருவாக்குத் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பாடல்.  ஈண்டு ஞானசம்பந்தர்,   “ தோடுடைய செவியன் “  என்று சிறப்பித்ததன் உள்பொருள், இன்னது என்பதைச் சேக்கிழார் அறிவிக்கும் போதும்,

    எல்லையிலா மறைமுதல்மெய்
        உடன்எடுத்த எழுதுமறை
    மல்லல்நெடும் தமிழால்இம்
        மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
    பல்லுயிரும் களிகூரத்
        தம்பாடல் பரமர்பால்
    செல்லுமுறை பெறுவதற்குத்
        திருச்செவியைச் சிறப்பித்து,

    என்று பாடி அறிவித்துள்ளார்.  இதனால்தான் ஈண்டு  “வேதத்தமிழ்க் கண்ணுள்ள மெய்ம்மை விரித்துத் தெரித்தருள் செய்குன்றையூர் வேந்து“ எனப்பட்டது.  இதற்கு இவ் எடுத்துக்காட்டே போதுமானது.                                

(3)