பக்கம் எண் :

புகல

614

             சிற்றில் பருவம்

புகலியில் விந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்,
இகலிவர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த வேலை

என்று சேக்கிழாரே  அறிவித்திருப்பதைக் காணும்போது புலப்படும் உண்மையாகும்.  ஆகவே, “நாங்கள் சிறுமியர் விளையாட்டாகக் கட்டிய வீடுகள்.  இவற்றைச் சிதைக்கலாமோ?” என்று பணிந்து கூறியாவாறாம்.

    “வையம்  வியக்கும்  செங்கரும்பு”  என்றது  அதனது, பருமையும் சுவையும் நோக்கி  என்க. கரும்புத் தெய்வலோகப் பொருளாகும். அதனைப் பூலோகத்திற்குக் கொணர்ந்தவர்கள் அதிகமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் ஆவர்.  இதனைப் புறநானூறு,

        அமரர் பேணியும் ஆகுதி அருத்தியும்
        அரும்பெறல் மரபின் கரும்பிவண் தந்து

என்று குறிப்பிடுதல் காண்க. ஆகவே, வையம் வியக்கும் கரும்பாயிற்று எனினும் ஆம்.  மேலும், குன்றத்தூர்க் கரும்பு, பாக்குமரப் பருமனில் வளர்ந்திருந்தயையின் “வையம் வியக்கும் செங்கரும்பு” எனப்பட்டது எனினும் ஆம். கரும்பு பாக்கு மரம்போலப் பருத்து இருந்தது என்பதை “கரும்பல்ல நெல் என்னக் கமுகல்ல கரும்பென்ன” என்று சேக்கிழார் வர்ணித்துள்ளமையாலும் உணரலாம்.

    கரும்பு, வாழை, பாக்கு, தென்னை ஆகிய மரங்கள் இந்திரன் சபைக்கு ஓர் அலங்காரமாக இருந்தன என்றது, அவை அவ்வளவு உணர்ந்து வளர்ந்து ஆகாயம் அளாவச் சென்று தேவேந்திரன் சபையில் அசையத் தொடங்கின என நாட்டின் நீர்வள, நிலவளத்தைச் சிறப்பித்தவாறாகும்,  இவ்வாறு திரு. பிள்ளை அவர்கள் தண்டக நாட்டை வர்ணித்துள்ளனர்.                                                                     

(74)