பக்கம் எண் :

5

 

       சிற்றில் பருவம்

619

5.     உற்றார் சகியார் புனல்ஆட்டல்
           உரியார் பலரும் அடிக்கடிஇவ்
       ஒல்லாப் புழுதி தோய்வெவன்என்
           றுரைப்பார் தவம்செய் தருமருந்தில்
       பெற்றார் செவியோ ரினும்பதைப்பார்
           பிறங்கக் காணில் என்படுவார்
       பேசா அருமை பாராட்டிப்
           பேணி எடுப்பா ரையும்சினப்பார்
       கற்றார் அரிய நூல்பலவும்
           கண்டார் விளங்க நூலின்உரை
       கரைந்தார் வரைந்து சிவன்அடியில்
           கலந்தார் கடிந்து பரசமயம்
       செற்றார் செறிதண் டகநாடா
           சிறியேம் சிற்றில் சிதையேலே
       செல்வம் செருக்கு குன்றையருள்
           செல்வா சிற்றில் சிதையேலே.

    (அ. சொ.) கண்டார்-நூல் பல இயற்றுவோர்,  கரைந்தார்-சொன்னவர்,  வரைந்து-விலக்கி, செற்றார்-கடிந்தவர், செறி-மிகுந்த, உற்றார்-அன்புடையவர், புனல் ஆட்டல் உரியார்-நீராட்டுபவர், ஒல்லா-சேராத, பொருந்தாத, தோய்வு-படிதல், எவன் - எப்படி, அருமருந்தில்-அருமையான தேவாமிருதத்தைப் போல ஓரினும்-கேட்டாலும், பிறங்க-மண் புழுதி படிந்து விளங்குதலை, என்படுவார்-எந்த நிலையை அடைவாரோ, பேசா-இனிய மொழிகளைப் பேசி, பேணி-பாராட்டி, சினப்பார்-கோபிப்பார்.

    விளக்கம் : குழந்தை, பெண்பால் சிறுவர்கள் வீடு கட்டக்கட்ட உதைத்துத் தள்ளி விளையாடுதலின், அதனால் பாதத்தில் புழுதி படிதல் கண்டு உறவினர்களும் அன்பர்களும் தாதிமார்களும் அடிக்கடி புழுதி தோய்வதற்குக் காரணம் என்ன என்று கேட்க நேர்ந்தது.