பக்கம் எண் :

என

630

             சிற்றில் பருவம்

என்பவளை  ஒரு மனைவியாகக்  கொண்டிருந்ததாகப்  பாகூர்க்  கல்வெட்டுப்  பட்டயம் குறிப்பிடுவது கொண்டும் தெளியலாம்.

    “உரை  சிறந்து  உயர்ந்த  பட்டத்து ஒரு தனித் தேவி”  என்றது சங்கா என்பவளை ஆகும்.   சேக்கிழார்  உரை  சிறந்து  என்று  ஏனைய  பெண்களை  எங்கும் குறிப்பிடாது ஈண்டுக் குறிப்பிட்டதன் நுண்கருத்து, பாகூர்ப் பட்டயத்துள் “திருமாலுக்கு வாழ்க்கைத் துணைவியாகப் பொருந்திய திரு மகளைப்போல இராஷ்டரக்கூடர் குடும்பத்தில் தோன்றிய சங்கா என்ற மெல்லியலாள் நந்திவர்மருக்கு (கழற்சிங்கன்) வாழ்வரசியாக அமைந்தாள்.  அவளது பொறுமைக்கு நில மகளை உவமை கூறலாம். குடிமக்களால் தாயாகப் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவள்.  அரசன் செய்த நல்வினையே ஓர் உரு கொண்டால் போலத் துலங்கினாள்.  இவள் பேர் அழகுடையவள்.  நுண் அறிவு வாய்ந்தவள்.  பல்கலையில் வல்லுநள்.” என்று இவளைப்பற்றிக் கூறப்பட்டிருத்தலினால் என்க.  இவற்றையெல்லாம் நோக்கும்போது இவர் பல கல் வெட்டுக்களையும் ஊன்றிக் கவனித்துத் தம் நூலில் செய்திகளை அறிவித்துள்ளார் அன்றோ, என்பது தெரிகிறது.

    இங்ஙனம் பல சான்றுகளால் சேக்கிழார் வரலாற்றுப் புலமை மிகுதியாக உடையார் என்பது புலனாகிறது.

    சேக்கிழார் பெருமானார், பரஞ்சோதியாராம் சிறுத்தொண்டர் இரண்டாம் புலிகேசியுடன் பொருது வெற்றி கொண்டார் என்றும், மகேந்திரவர்ம பல்லவன் அமண் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் குணபர ஈச்சுரம் என்ற கோவிலைக் கட்டினான் என்றும் கூறுதலால் அன்றோ திருஞான சம்பந்தர் அப்பர் காலங்களை அறிய முடிந்தது !  ஆகவே, இன்னோரன்ன அரிய குறிப்புக்களை விழைவார்க்கு விழைந்த வண்ணம் ஈயும் புலவர் பெருமானார் சேக்கிழார் ஆதலின், அவரைச் சிந்தாமணி என்றனர் திரு.  பிள்ளை அவர்கள்.