பக்கம் எண் :

New Page 1

 

       சிற்றில் பருவம்

639

    “நாரா யணன்படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
     ஏரார்சி வன்பிறந்தான் என்னும்சொல்-சீரார்
     மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
     மழீசைப் பரனடியே வாழ்த்து” என்றும் பாடியுள்ளனர்.

    இவ்விருவர் தம் பாடலில்  கண்ட  உண்மைக்  கருத்து.   உலகில்  மும்மூர்த்திகளே உயர்ந்த மூர்த்திகள் என்பதாகும், இம்மூர்த்திகளுள்  திருமாலே முதல் மூர்த்தி என்பதும் ஆகும்.  இதனைத் திருமங்கை ஆழ்வாரும், “மூவருள் முதல்வனாய ஒருவனை” என்று திருமாலை உணர்த்தி உள்ளனர். ஆக, ஆழ்வார்களின் முடிபு இந்த மும்மூர்த்திகளுக்கு மேல் ஒரு மூர்த்தி இல்லை என்பது.  உருத்திரனையே வைணவர்கள் சங்கரன் என்றும், சிவன் என்றும் கருதிவிட்டனர்.  ஆனால், சைவசமயம் எங்கும், மும்மூர்த்திகட்கு மேலும் ஒரு மூர்த்தியுமுண்டு என்றும், அதுவே பரம்பொருள், பெரிய பொருள், பரசிவம் என்றும் உணர்ந்து கூறியுள்ளது.  இதனை அறிந்தேதான், ஈண்டுத் திரு. பிள்ளை அவர்கள் “நாதம் அகன்ற பரமன்” என்று கூறியுள்ளனர்.

    நீலமேனி வாலிழை பாகத்து
    ஒருவன் இருதாள் நிழற்கீழ்
    மூவகை உலகமும் முகிழ்த்தன் முறையே

    என்று ஐங்குறு நூல் என்னும் சங்க நூல் பாடலால் அம்மை அப்பனது திருவடியினின்றே மண், விண், பாதளம் என்னும் மூவுலகங்களும் தோன்றின என்று கூறியிருப்பதை நோக்கு மிடத்து நான்முகன் எங்ஙனம் சங்கரனைப் படைக்க முடியும்?

    மும்மூர்த்திகள் எங்ஙனம் தோன்றினர் என்பதையும், அம்மூர்த்திகளுக்கு மேலேயும் மூர்த்தி உண்டு என்பதையும் பிரபுலிங்க லீலை நன்கு விளக்கமாக எடுத்து உரைப்பதை ஈண்டுக் கூறாமல் மேலே செல்லுதற்கு இல்லை.

பரசிவம் பிரமம் என்னப் பட்டொரு திரிவும் இன்றி
உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கம் தன்னில்
வருமுயர் சதாசி வன்தான் மற்றவன் தனைப்பொருந்தும்
அருமைகொள் ஞானசத்தி அவர்களால் சிவன் உதிப்பன்