பக்கம் எண் :

 

       சிற்றில் பருவம்

641

வாது செய்து மயங்கு மனத்தராய்
ஏதுசொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர்எனப் படுவார்க் கெல்லாம்
மாதே வன்அலால் தேவர்மற் றில்லையே

கூவ லாமை குரைகடல் ஆமையைக் 
கூவலோ டொக்கு மோகடல் என்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால் 
தேவர் தேவன் சிவன்பெருந் தன்மையே

எரிபெ ருக்குவர் அவ்எரி ஈசன
துருவ ருக்க மதாவ துணர்கிலார்
அரிஅ யற்கரி யானைஅ யர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ
இருக்க நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைநினைப் பார்கன் மனவரே

தாயின் நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய உள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே

என்பன.

    ஆகவேதான், சிறுமையர்கள் உண்மை உணர்ந்து “அப்படி மூவருள் ஒருவனெனப் பரமனைக் கூறின் அடைவது அடையும் என நன்கு தெரிந்தேம்’ என்றனர்.  அடைவது அடைதலாவது நரகமாகும்.  ஈண்டு மூவருள் ஒருவன் அல்லன் இறைவன்.  அவன், “நாதம் அகன்ற பரமன்” என்பதை நன்கு உணர்த்தினர் திரு.பிள்ளை அவர்கள்.  நாதம் என்பது நாத தத்துவம்.  அகன்ற என்பது  அதற்கும்  அப்பாற்பட்ட  என்பதாம்.   பரமன்  துரிய சிவமாகும். “வேதம் கடந்த விமலன்” என்று கச்சியப்பரும் தெரிந்து கூறினர்.  இத்தகைய இறைவன் மூவருள் ஒருவன் என்பது சிவ நிந்தையாகும்.  நரகத்தையும் அடைவிக்கும்.