பக்கம் எண் :

New Page 1

658

             சிற்றில் பருவம்

செய்கிறது.  சிலைத்தலாவது ஒலித்தலாம்.  இதனை முழக்குதல் என்றும் கூறலாம்.  தமிழின் முழக்கத்திற்குக் கீழ்வரும் சான்றுகளைக் காண்க.

    ஒருமுறை பெருஞ் சித்திரனார் அதிகமான் நெடுமான் அஞ்சியைக் காணச் சென்றார்.  அதிகமான், புலவர் பரிசிற்குத்தான் வந்திருப்பார் என்று எண்ணிப் பரிசிலை ஆள்வசம் அனுப்பிப் புலவரை வந்து காணாதிருந்தனன்.  அதுபோது புலவர் சினந்து, “காணாது ஈத்த இப்பொருட்கியானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்” என்று பாடியுள்ளனர்.  இவரே ஒருமுறை இளவெளிமானிடம் பரிசில்கேட்க, அவன் சிறிது கொடுத்தனன்.  அதனைக் கொள்ளாது குமணனிடம் சென்று யானைப் பரிசில் பெற்று மீண்டு அவனது காவல் மரத்தில் அதனைக் கட்டி,

    இரவலர் புரவலர் நீயும் அல்லை
    புரவலர் இரவலர்க் கில்லையும் அல்லர்
    இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு
    ஈவோர் உண்மையும் காண்இனி நின்னூர்க்
    கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
    நெடுநல் யானை எம்பரிசில்
    கடுமான் தோன்றல் செல்வன் யானே

என்று அவனிடம் பாடித் தமிழ் முழக்கம் செய்தனர்.

மன்னவனும் நீயோ வளநாடும் நின்னதோ
உன்னையறிந் தோதமிழை ஒதினோம்-என்னைவிரைந்
தேற்றுக்கொள் ளாதவேந் துண்டோஉண் டோகுரங்
கேற்றுக்கொள் ளாத கொம்பு”

என்று கம்பரும் தமிழ் முழக்கம் கொண்டு பாடினர்.

    தமிழ்மொழி ஒலிமிக்க மொழி.  திருப்புகழில் தமிழ் ஒலி செய்தலைப் பரக்கக் காணலாம் “தண்டை அணி வெண்டயம், கிக்கிணி சதங்கையும், தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே” என்னும் திருப்புகழில் தமிழ் ஓசையை உணர்க. தமிழ் ஓசை அற்றது என்ற பொருளில் அரவம் என்று சிலர் கூறுவராயின், அவர்கள் அறிவை என்னென்பது?

(81)