பக்கம் எண் :

New Page 1

704

             சிறுபறைப் பருவம்

        மேன்மைப் பதிகத் திசையாழில்
            இடம்பெற் றுடனே மேவியபின்
        பானற் களத்தார் பெருமணத்தி
            லுடனே பரமர் தாளடைந்தார்

எனத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முத்தி பெற்றமையினையும்,

        தேவர்பிரான் திருத்தொண்டில்
            கோச்செங்கட் செம்பியர்கோன்
        பூவலயம் பொதுநீக்கி
            ஆண்டருளிப் புவனியின்மேல்
        ஏவியநல் தொண்டுபுரிந்
            திமையவர்கள் அடிபோற்ற
        மேவினார் திருத்தில்லை
            வேந்தர்திரு வடிநிழல்கீழ்

என்று கோச்செங்கட் சோழ நாயனார் முத்தி பெற்றதையும் பாடிய பாடல்களால், முத்தி     தரும்  கவி  பாடிய  சிறப்பைக்  காண்க.   முத்தி என்பது அந்தமில் இன்பத்து அழிவில் வீடாகும்.

    ஓதுபு என்பது செய்பு என்னும் வாய்பாட்டு வினை எச்சமாகும். இதுபோலப் பல எச்ச  வாய்பாட்டுச் சொற்கள் உண்டு.

    செய்து செய்பு செய்யாச் செய்யூச்
    செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
    வான்பான் பாக்கின் வினைஎச் சம்பிற
    ஐந்தொன் றாறுமுக் காலமும் உணர்த்தும்

என்னும் நன்னூல் சூத்திரத்துள் காண்க.

    திருத்தொண்டர் புராணத்துள் பத்தி தரும் பாடல்கள் உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?” பக்திச்சுவை நனிச் சொட்டச்சொட்டக் கவி பாடிய பாவலர்” என்று முன்பே திரு பிள்ளை அவர்கள் பாடியுள்ளனர் அல்லரோ? பெரிய புராயணப் பாடல்கள் பெரும்பாலும் பத்தித் தரும் பாடல்களைக் கொண்டதுதானே !                  

(88)