ஞ
ஞாலம் அறிய
பிழைபுரிந்து
நம்பர் அருளால்
நான்மறையின்
சீலம் திகழும் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளை யார்தம்
திருக்கையிலை
கோல மழுவால் ஏறுண்டு
குற்றம் நீங்கிச்
சுற்றமுடன்
மூல முதல்வர் சிவலோகம்
எய்தப் பெற்றான்
முதுமறையோன்
என்றும் கூறப்பட்டிருத்தல்
காண்க. இங்ஙனம் எல்லாம் அரிய பொருள்களைத் தெரிய வைத்து ஆண்ட பெருமை சேக்கிழார்க்கு
இருத்தலின், ‘எமை ஆண்ட பெம்மான்’ என்றனர்.
சேக்கிழார்
பெருமானார் சீவக சிந்தாமணி இடத்தில் வெறுப்புடைய மனத்தர் என்று ஒரு சிலர் கருதக்கூடும் ஆதலின்,
அத்தகைய தீங்கினையும் மனத்தாலும் கொள்ளாதவர் என்பதை நன்கு உணர்த்தவே “தீது அகம் மதித்திடாச்
சேவையர் குலாதிபன்” என்றனர். சேக்கிழார் பெருமானார் சீவகசிந்தாமணி இடத்தில் தீங்கான
உள்ளம் கொண்டிருப்பாராயின், அந்நூற் பொருள்களில் சிலவற்றைத்தம் நூலில் இயைத்தும்பாடி
இருக்கமாட்டார். சிந்தாமணியனை அவர் நன்கு பயின்றிருந்தனர் என்பதற்குப் பெரிய புராணத்துள்
பல சான்றுகள் உண்டு.
பத்தியின் பாலர் ஆகிப்
பரமனுக் காளாம் அன்பர்
தத்தமில் கூடி னார்கள்
தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி
யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மைபோல
விளைந்தன சாலி எல்லாம்
என்னும் சேக்கிழார்
வாக்கு,
சொல்லருஞ் சூல்பசும்
பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்
தீன்று மேலலார்
செல்வமே போல்தலை
நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின்
இறைஞ்சிக் காய்த்தவே
என்னும் திருத்தக்க தேவர்
பாடலைத் தழுவியதாகும்.
|